மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயற்கை கை-கால்கள்!


மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயற்கை கை-கால்கள்!
x
தினத்தந்தி 12 Jun 2018 11:01 AM IST (Updated: 12 Jun 2018 11:01 AM IST)
t-max-icont-min-icon

பிராஸ்தெடிக் கை-கால்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயற்கையான கை கால்களுக்கு நிகரான உணர்வு மற்றும் கட்டுப்பாட்டை கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்மிடம் இருக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை அல்லது பலவற்றையும் இழந்துவிட்டால் கூட நம் முயற்சியால் அவற்றை மீண்டும் பெற முடியும். ஆனால் நம் உயிரையே இழந்துவிட்டால்? அதனை மீண்டும் பெற முடியாதுதானே? அத்தகைய உயிரிழந்த மற்றும் செயலற்ற நிலையைத்தான் சங்க காலத்தில் ‘கையறு நிலை’ என்று கூறினார்கள்.

விபத்து அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் காரணமாக, கை அல்லது கால் துண்டிக்கப்பட்டு அவற்றை இழந்துவிடுபவர்களின் நிலை கூட கிட்டத்தட்ட ஒரு ‘கையறு நிலை’தான். ஏனென்றால், கை கால்களை இழந்தவர்களுக்கு, அதிநவீன செயற்கை அல்லது ப்ராஸ்தெடிக் கை/கால்கள் (Prosthetic arms/legs) பொருத்தப்படுகின்றன.

இருந்தாலும், அவற்றை பொருத்திக்கொள்பவர்கள் இயற்கையான கை/கால்கள் உடலில் இருப்பது போல உணரவோ அல்லது இயற்கையான கை/கால்கள் போல கட்டுப்படுத்தவோ முடியாது என்பதால் செயற்கை கை/கால்கள் உடலில் இருந்தாலும் அவை இல்லாதது போன்ற ஒரு செயலற்ற நிலைதான். இது நீண்ட காலமாகவே ஒரு நடைமுறைச் சிக்கலாக இருந்துவருகிறது.

இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண உலகின் பல முன்னணி பிராஸ்தெடிக் ஆய்வுக்குழுக்கள் பல வருடங்களாக முயன்று வருகின்றன. அத்தகைய ஒரு ஆய்வில் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி/மசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் உயிர் இயற்பியலாளர் மற்றும் பொறியியலாளர்கள் குழுவுக்கு மட்டும் தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது.

எம்.ஐ.டியின் ஆய்வுக்குழு உருவாக்கியுள்ள பிராஸ்தெடிக் கை-கால்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயற்கையான கை கால்களுக்கு நிகரான உணர்வு மற்றும் கட்டுப்பாட்டை கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிராஸ்தெடிக் கை-கால்களில், நம் கைகளில் உள்ள பைசெப் (Bicep) மற்றும் ட்ரைசெப் (Tricep) போன்ற எதிரெதிர் தசைகளுக்கு இடையில், ஒன்று மற்றொன்றை எதிரெதிர் திசையில் இழுக்கும் தன்மை உண்டு. அதுபோன்றதொரு தசைத்தொடர்பை பிராஸ்தெடிக் கை-கால்களில் மிகவும் துல்லியமாக உருவாக்கியுள்ளனர்.

அதன்மூலம், கை-கால்களை இழந்த மற்றும் செயற்கை கை-கால்கள் பொருத்திக்கொண்ட நோயாளிகளால், கை-கால்களை பார்க்காமலேயே அவை இருக்கும் உடலின் பகுதி மற்றும் அவற்றின் நகர்வுகள் ஆகியவற்றை உணர முடிந்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணர்வு உயிரியலில் ப்ரோப்ரியோசெப்ஷன் (Proprioception) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வு மூலம் உருவாக்கப்பட்ட மூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கால் (neuroprosthetic foot) ஒன்றைப் பொருத்திக்கொண்ட நோயாளி ஒருவர், இழந்த தன் கால்களில் உள்ள எலும்புகளை மீண்டும் தன் கால்களில் பொருத்திக்கொண்ட உணர்வு ஏற்பட்டதாக கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, மூளைக்கும் செயற்கை கால்களுக்கும் இடையிலான தொடர்பானது, மூளை அனுப்பிய சமிக்கை கால்களைச் சென்றடைந்ததற்கும், கால் நகர்ந்ததற்கும் கால இடைவெளி அல்லது தாமதமே இல்லாமல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.டி.யின் ஆய்வாளர் டைலர் க்ளைட்ஸ் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வில் கை கால்களை இழந்த சுமார் 7 பேர் மீது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதனைகளில், நோயாளிகள் எந்தவித தாமதமும் இன்றி, நினைத்த மாத்திரத்தில் தங்களின் செயற்கை கால்களை அங்கும் இங்குமாக அசைக்கவும், படிகளில் ஏறவும் மற்றும் இதர பல வேலைகளைச் செய்யவும் முடிந்தது இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்கது.

இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் செயற்கை உடல் பாக உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் இத்தகைய ஆய்வு முயற்சிகளின் இறுதி இலக்கு உடல் பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை பாகங்களை பொருத்தி அவை இயற்கை பாகங்களுக்கு நிகரான உணர்வு மற்றும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தித் தருவதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story