அரசின் பணப்பரிமாற்ற அப்ளிகேசன் பயன்படுத்துகிறீர்களா?


அரசின் பணப்பரிமாற்ற அப்ளிகேசன் பயன்படுத்துகிறீர்களா?
x
தினத்தந்தி 12 Jun 2018 5:37 AM GMT (Updated: 12 Jun 2018 5:37 AM GMT)

‘பிம்’ பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ‘பிம்’ (BHIM) எனப்படும் பணப்பரிமாற்ற அப்ளிகேசன். ‘பாரத் இன்டர்பேஸ் பார் மணி” என்பதன் சுருக்கமே ‘பிம்’. கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அப்ளிகேசனை கணிசமானவர்கள் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதன் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அப்ளிகேசன் பயன்படுத்தும் முறையையும், சிறப்புகளையும் அறிவோம்...

சிறப்புகள்

 ‘பிம்’ அப்ளிகேசன், ‘நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) எனும் அமைப்பால் உருவாக்கப்பட்டது. ‘யுனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ்’ (யூ.பி.ஐ.) எனப்படும் பணப்பரிமாற்ற நுட்பத்தின் அடிப்படையில் இரு வங்கிக் கணக்குகளுக்கு இடையே, ஸ்மார்ட்போன் மூலம் இதில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

 இணைய இணைப்பு இல்லாமல் ஆப்லைன் முறையிலும் இதில் பணம் அனுப்ப முடிவது சிறப்பு.

 இதில் கிரெடிட் கார்டு தகவல்கள், ஐ.எப்.எஸ்.சி. கோடு, நெட்பேங்கிங் டிரான்ஸ்பர் பாஸ்வேர்டு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தமிழ் உள்பட 12 இந்திய மொழிகளில் இந்த அப்ளிகேசன் கிடைக்கிறது. 97 வங்கிகளின் கணக்குகளுக்கு இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம்.

 கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தின் இந்த அப்ளிகேசன் வழியே ஒரு கோடியே 26 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டு 4 ஆயிரத்து 973 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

பயன்படுத்தும் முறை

 ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் பிளே ஸ்டோரில் இருந்து ‘பிம்’ அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்யலாம்.

 அப்ளிகேசனை நிறுவும்போது (இன்ஸ்டால்) உங்கள் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம் உள்பட12 மொழிகளில் இந்த அப்ளிகேசன் கிடைக்கிறது. இப்போது மேலும் 3 மொழிகளில் தயாராகி உள்ளது.

 மொழியை தேர்வு செய்ததும், உங்கள் செல்போன் எண் கேட்கப்படும். உங்கள் எண்ணை பரிசோதிக்க ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புவார்கள். பின்னர் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

 இப்போது 4 இலக்க கடவுக் குறியீடு கேட்கப்படும். அதை கொடுத்த பின், உங்கள் வங்கிக் கணக்கு பற்றிய தகவலை கேட்கும். எந்தக் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் நடைபெற வேண்டுமோ அதை பதிவு செய்துவிட்டால் எளிமையாக உங்கள் போன் நம்பர் மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம்

 இந்த அப்ளிகேசனை பயன்படுத்தும்போதெல்லாம் திரையில் 3 ஆப்சன்களை காட்டும். சென்ட், ரெக்வஸ்ட்யு மற்றும் ஸ்கேன்/பே, என்ற வசதிகளே அவை.

போன் எண்களின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு இதற்கு தேவைப்படாது.

 பணம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது போன் எண்ணையும், அனுப்ப வேண்டிய பணத்தின் மதிப்பையும் கொடுத்துவிட்டு, உங்களுக்கான குறியீட்டு சொல்லை கொடுத்துவிட்டால் பணம் சென்றடைந்துவிடும். பணம் பெறுபவர் தனது போன் எண்ணை உங்களைப்போல அப்ளிகேசனுடன் இணைத்திருப்பது அவசியமாகும்.

 ரெக்வஸ்ட் என்ற வசதியின் வழியே நீங்கள் உங்கள் பணத் தேவையை பகிர முடியும். யாரிடம் இருந்து பணம் பெற வேண்டுமோ ரெக்வெஸ்ட் ஆப்சன் சென்று அவரது போன் எண்ணை குறிப்பிட்டு தகவல் அனுப்ப முடியும்.

 ஸ்கேன் மற்றும் பே என்ற வசதியில், பாஸ் கோடு (குறியீடு) களுக்குப் பதில் கியூ.ஆர். கோடு மூலமாக பணப்பரிமாற்றம் செய்யலாம்.

புதிய வசதிகள்:

 தற்போது ‘பிம்’ அப்ளிகேசனில் குரல் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில தனியார் வங்கிகள் குரல் வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை வழங்குகின்றன.

 வெறும் போன் எண் அடிப்படையில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதும், வெறும் கடவுக்குறியீடும் பாதுகாப்பு குறைவானதோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்துள்ளதால் கூடுதல் பாதுகாப்புக்காக குரல் வசதியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 4 இலக்க யு.பி.ஐ. பின் குறியீட்டை நாமாக உருவாக்கிக் கொள்ளவும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

 மேலும் 3 மொழிகளில் இந்த அப்ளிகேசனை வெளியிடும் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. விரைவில் தேசிய அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் இந்த அப்ளிகேசனை பயன்படுத்த வழி செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 இந்த அப்ளிகேசனை பயன்படுத்த இந்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. இதை பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பணம் மிச்சமாகும் சலுகை வழங்கப்படுகிறது, இதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்பவர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்! 

Next Story