கருவிழிப்படலத்தை அச்சடிக்கும் ‘3டி பயோபிரிண்டர்’


கருவிழிப்படலத்தை அச்சடிக்கும் ‘3டி பயோபிரிண்டர்’
x
தினத்தந்தி 12 Jun 2018 12:22 PM IST (Updated: 12 Jun 2018 12:22 PM IST)
t-max-icont-min-icon

கருவிழிப்படலத்தை அச்சடிக்க அடிப்படைத் தேவையான, ஸ்டெம் செல்கள் கொண்ட உயிர் மை அல்லது பயோ இங்க்கை உற்பத்தி செய்ய முடியவில்லை.

‘வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை செய்து பார்’ என்றொரு பழமொழி சொல்வார்கள். அதாவது ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதும், ஒரு கல்யாணத்தை செய்து முடிப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஏனென்றால், இந்த இரண்டுக்கும் பல வருட உழைப்பில் சேமித்த பணமும், பல வருடக்கால விடா முயற்சியும் மிகவும் அவசியம்.

ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒரு முழு வீட்டையே சில நாட்களில் கட்டி முடித்துவிட முடியும். எப்படித் தெரியுமா? ‘3 டி பிரிண்டர்’ எனப்படும் முப்பரிமாண அச்சடிக்கும் எந்திரத்தின் உதவியுடன்.

எத்தனை பெரிய வீடாயினும் அதனை சில நாட்களில் கட்டி முடித்துவிடும் அட்டகாசமான 3டி பிரிண்டர்கள் தினசரி மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோலவே நம் அன்றாடத் தேவைக்கான பல வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சில எந்திரங்களை அச்சடிக்கும் 3டி பிரிண்டர்களும் இருக்கின்றன.

நம் வீட்டையும், வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் அச்சடிக்க பிரத்தியேக வசதிகள் கொண்ட 3டி பிரிண்டர்கள் பெருகி வரும்போது, நம் உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட உடல் தசைகள் மற்றும் காது, மூக்கு, எலும்பு போன்ற சில உடல் பாகங்களை அச்சடிக்கும் 3டி பிரிண்டர்களான ‘பயோ பிரிண்டர்’களை (Bioprinter) உருவாக்கி விட வேண்டுமென்று, விஞ்ஞானிகள் கடந்த பல வருடங்களாக விடாது முயன்று வருகின்றனர்.

ஆனால், பயோபிரிண்டர் தொழில்நுட்பம் மூலம் இதுவரை முழுமையாக வளர்ச்சி அடைந்த உடல் பாகத்தை உற்பத்தி செய்ய முடியாததால் இந்த தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை என்றுதான் கூறவேண்டும். 3 டி பயோ பிரிண்டர் மற்றும் பயோ இங்க் (Bio-ink) எனப்படும், உயிரணுக்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் நிறைந்த ஒரு ‘உயிர் மை’ ஆகியவற்றின் உதவியுடன் மனித கருவிழிப்படலத்தை (human cornea) உற்பத்தி செய்து அசத்தியிருக்கிறார்கள் இங்கிலாந்தில் உள்ள நியூ காசில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

மனித கருவிழிப்படலத்தை பயோபிரிண்டர் மற்றும் பயோ இங்க் ஆகியவற்றுடன் முழுமையாக உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கக் கூடிய ஒரு ஆதாரமாக கருதப்படும் இந்த ஆய்வை சே கான்னன் தலைமையிலான ஆய்வாளர்கள் மேற்கொண்டு அசத்தியிருக்கிறார்கள்.

தற்போது, ஒவ்வொரு வருடமும், உலகளவில் சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் கருவிழிப்படலத்தை தானம் செய்வோருக்காக காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வெறும் 44 ஆயிரம் பேருக்கு மட்டுமே கருவிழி படல மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொடர்ந்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

கண்களின் மேற்பரப்பில் உள்ள ஒரு மெல்லிய சவ்வுதான் கருவிழிப்படலம் எனப்படுகிறது. நோய் அல்லது காயம், விபத்து காரணமாக பாதிப்புக்குள்ளாகும் கருவிழிப்படலம் கண் பார்வை கோளாறுகள் அல்லது சில சமயங்களில் கண் பார்வை மொத்தத்தையும் இழக்கச் செய்துவிடும். அத்தகைய அதிமுக்கியமான கருவிழிப்படலத்தை உற்பத்தி செய்யும் பயோபிரிண்டர் இருந்தால் அது ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.

பயோபிரிண்டர் மூலம் கருவிழிப்படலத்தை உருவாக்க உலகின் பல ஆய்வுக்குழுக்கள் கடந்த பல வருடங்களாக முயன்று வந்தாலும் அவர்கள் யாராலும் அதனை உருவாக்க முடியவில்லை. ஏனெனில், கருவிழிப்படலத்தை அச்சடிக்க அடிப்படைத் தேவையான, ஸ்டெம் செல்கள் கொண்ட உயிர் மை அல்லது பயோ இங்க்கை உற்பத்தி செய்ய முடியவில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, ஸ்டெம் செல்கள் கொண்ட உயிர் மையானது கருவிழிப்படலத்தின் வடிவத்தை நிலைக்கச் செய்யும் அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும். அதேசமயம், 3டி பயோபிரிண்டரின் ஊசிமுனை வழியாக வெளியே வரும் அளவுக்கு மிருதுவாகவும் இருக்க வேண்டும். இரண்டு, முக்கியமாக மையில் இருக்கக்கூடிய ஸ்டெம் செல்களை உயிருடன் வைத்து பாதுகாக்கவும் வேண்டும். இவ்விரு காரணங்களால் உலகின் பல ஆய்வுக்குழுக்கள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளன.

அல்ஜிநேட் (alginate) மற்றும் கொல்லாஜன் (Collagen) ஆகிய இரு ரசாயனங்களின் கலவையில் உருவாக்கப்பட்ட உயிர் மையின் உதவியுடன் வெறும் பத்தே நிமிடங்களில் மனித கருவிழிப்படலத்தை உருவாக்கி அசத்தியுள்ளது சே கான்னனின் ஆய்வுக்குழு. தற்போது சோதனைக்கூட அளவில் வெற்றிபெற்றுள்ள இந்த மனித கருவிழிப்படல 3டி பயோபிரிண்டர் தொழில்நுட்பம் விலங்கு மற்றும் மனித ஆய்வுகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் கண்பார்வையைப் பெறுவார்கள் என்பது உறுதி! 

Next Story