கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி
கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய கடற்படை, தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் தேர்வுசெய்து அவர்களை குறிப்பிட்டகால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்து வருகிறது. தற்போது பிளஸ்-2 படித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் (பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம்- பிப்ரவரி 2019) என்ற பயிற்சித் திட்டத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டு காலம் பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பி.டெக் படித்ததற்கான சான்றிதழும் கிடைக்கும். பின்னர் அவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணிவாய்ப்பாகும்.
இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இனி...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 19-வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1999 மற்றும் 1-1-2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.
கல்வித் தகுதி:
மேல்நிலைக் கல்வியை 10+2 முறையில் முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இவர்கள் எஸ்.எஸ்.பி. அமைப்பு நடத்தும் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
உடற்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையளவு பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6,6/9 என்ற அளவுக்குள்ளும், கண்ணாடியுடன் 6/6,6/6 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் வியாதி இருக்கக்கூடாது.
தேர்வு செய்யும் முறை:
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) அமைப்பால் தேர்வுகள் நடத்தப்படும். ஸ்டேஜ்1, ஸ்டேஜ்2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். அதில் நுண்ணறிவுத் திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்திலும் தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்களுக்கு 4 ஆண்டு பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.டெக். நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் சப்லெப்டினன்ட் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணி வாய்ப்பாகும். மேலும் கமாண்டர் அதிகாரி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பம் அனுப்பலாம். 21-6-2018-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்வதோடு, மெட்ரிகுலேசன் சான்றிதழ் எண்ணையும் தயாராக வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கவும்.
இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பித்ததும் பூர்த்தியான விண்ணப்பத்தை, 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும்.
மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
Related Tags :
Next Story