கிராம வங்கிகளில் 10190 அதிகாரி பணிகள்


கிராம வங்கிகளில் 10190 அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 12 Jun 2018 12:45 PM IST (Updated: 12 Jun 2018 12:45 PM IST)
t-max-icont-min-icon

கிராமிய வங்கிகளின் அலுவலக உதவியாளர், அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 190 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

“இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. பொதுத் துறை வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளின் பணியிடங்களில் பணி நியமனம் பெறலாம்.

தற்போது மண்டல கிராமிய வங்கிகளுக்கான (ஆர்.ஆர்.பி.) அலுவலக உதவியாளர், அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து (சி.டபுள்யு.இ.7) தேர்வை ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. இதன் மூலம் 56 கிராமிய வங்கிகளில் ஆபீஸ் அசிஸ்டன்ட், அதிகாரி (ஸ்கேல்-1, 2, 3) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 10 ஆயிரத்து 190 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 5 ஆயிரத்து 249 பணியிடங்கள் உள்ளன.

இது தவிர அதிகாரி (ஸ்கேல்-1 ) பணிக்கு 3 ஆயிரத்து 312 இடங்களும், அதிகாரி (ஸ்கேல்-2, அக்ரிகல்சர்) பணிக்கு 72 இடங்களும், அதிகாரி (ஸ்கேல்-2, மார்க்கெட்டிங்) பணிக்கு 38 பேரும், அதிகாரி ஸ்கேல்-2, டிரெஸ்ஸரி) பணிக்கு 117 பேரும், அதிகாரி (ஸ்கேல்-2, சட்டம்) பணிக்கு 32 பேரும், அதிகாரி (ஸ்கேல் - 2, சி.ஏ.) பணிக்கு 21 பேரும், அதிகாரி (ஸ்கேல்-2, ஐ.டி.) 81 இடங்களும், அதிகாரி (ஸ்கேல்-22, பொது வங்கிப்பணிகள்) 1,208 இடங்களும், அதிகாரி (ஸ்கேல்-3) பணிக்கு 160 இடங்களும் உள்ளன.

தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தரப்படும் மதிப்பெண் அட்டையின் அடிப்படையில் இந்த 56 வங்கிகளில் அறிவிக்கப்படும் பணியிடங்களில் வாய்ப்பு பெறலாம்.

இந்த தேர்வு எழுத விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆபீசர் (ஸ்கேல்- 1 ) பணி விண்ணப்பதாரர்கள் 18-30 வயதுடையவர்களாகவும், ஸ்கேல்- 2 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஸ்கேல்-3 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1-6-2018 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகையும் அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்கேல்-1 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

ஸ்கேல்-3 அதிகாரி பணி விண்ணப்பதாரர், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஸ்கேல்-2 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சியும், 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. போன்ற என்ஜினீயரிங் படிப்புகள், சி.ஏ., சட்டப்படிப்பு, எம்.பி.ஏ. நிதி, எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கும், அது தொடர்பான பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் இந்த அதிகாரி பணியில் வாய்ப்பு உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

பொது ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளாக நடைபெறும்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு தேர்வுக்குமான தேதிகளை இணையதளத்தில் பார்க்கலாம்.

முக்கியத் தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 2-7-2018

மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story