மதுவால் சீரழிந்த குடும்பம்: டிரைவர் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற மனைவியும் பலியான பரிதாபம்
வல்லநாடு அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம்,
வல்லநாடு அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மதுவால் குடும்பமே சீரழிந்த நிலையில், அவர்களது பெண்குழந்தைகள் அநாதைகளாகி உள்ளனர்.
லாரி டிரைவர்தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு திருவேங்கடபுரம் நடு தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் சங்கரன் (வயது 35). இவர் தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அன்னரத்தினம் (33). இவர்களுக்கு அனுசியா (9), சுபாஸ்ரீ (6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் அனுசியா 4–ம் வகுப்பும், சுபாஸ்ரீ 1–ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
சங்கரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்– மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
மது குடித்து வந்ததை கண்டித்ததால்...நேற்று முன்தினம் காலையில் சங்கரன் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் இரவு 10.30 மணி அளவில் மதுகுடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது 2 மகள்களும் தூங்கி கொண்டிருந்தனர். சங்கரன் மது குடித்து வந்ததை, மனைவி கண்டித்தார். இதனால் கணவன்– மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் மனமுடைந்த சங்கரன் திடீரென்று வீட்டில் உள்ள ஒரு அறையில் சென்று, தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் உடலில் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சி அடைந்த அன்னரத்தினம் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரது உடலிலும் தீப்பிடித்தது. இருவரது உடலில் தீப்பற்றி எரிந்தது.
கணவன்–மனைவி சாவுஇருவரும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு சென்றனர். அப்போது வீட்டுக்குள் தீயில் கருகி கிடந்த சங்கரன், அன்னரத்தினம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அநாதைகளான குழந்தைகள்2 பெண் குழந்தைகளும் தங்களை அநாதைகளாக விட்டு சென்ற பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மது பழக்கத்தால் கணவன், மனைவி தீயில் கருகி உயிரிழந்து குடும்பமே சீரழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.