மாவட்ட செய்திகள்

ஊட்டி நகராட்சி 32 மார்க்கெட் கடைகளுக்கு சீல் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல் + "||" + Seat for Ooty municipal markets Practicing traders

ஊட்டி நகராட்சி 32 மார்க்கெட் கடைகளுக்கு சீல் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்

ஊட்டி நகராட்சி 32 மார்க்கெட் கடைகளுக்கு சீல் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்தாத 32 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைப்பிரதேசமான ஊட்டியில், ஆங்கிலேய அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் பயன்பெறும் வகையில் ஊட்டி மார்க்கெட்டை தொடங்கினர். இந்த மார்க்கெட்டில் ஆங்கிலேயர் பயன்படுத்தும் சூப்புக்கான பாலக், கிளைக்கோஸ், தர்னீப் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள், ஆடு, கோழி, அணை மீன்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நாளடைவில் ஊட்டியின் முக்கிய மார்க்கெட்டாக விளங்கியது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மங்குஸ்தான், ரம்பூட்டான், பிளம்ஸ், விக்கி பழங்கள், பேரிக்காய் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர்.


ஊட்டி மார்க்கெட் நகராட்சிக்கு சொந்தமானதாக உள்ளது. இங்கு ஆயிரத்து 550 கடைகள் உள்ளன. மேலும் புளுமவுண்டன் சாலை, மார்க்கெட் மேல்பகுதி, சேரிங்கிராஸ், பிங்கர்போஸ்ட், காந்தல், எட்டின்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் நகராட்சி வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. வணிக வளாகங்களில் 250 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வாடகை தொகை மூலம் ஆண்டுக்கு ரூ.2½ கோடி நகராட்சிக்கு வருமானம் கிடைத்து வந்தது. இந்த வருமானத்தை கொண்டு நகராட்சி திட்டப்பணிகளை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகராட்சி முன்னாள் கமிஷனர் சத்தார் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு கடை வாடகையை உயர்த்தியது. ஒரு ஆண்டுக்கு ரூ.13 கோடி நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் வகையில் உயர்த்தப்பட்டது. இந்த வாடகை உயர்வை எதிர்த்து மார்க்கெட் மற்றும் வணிகவளாகங்களில் கடை வைத்திருப்பவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே ஒரு சில வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்துவதாக நகராட்சிக்கு கடிதம் வழங்கினர். ஆனால், பல வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகையை நகராட்சிக்கு செலுத்தவில்லை. அதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பியது.

இந்த நிலையில் தற்போது தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் செயலாளர் உத்தரவின்படி, உயர்த்தப்பட்ட வாடகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கடை வியாபாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அவர்கள் நோட்டீசு கிடைக்கப்பெற்றும் வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்தாத ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு நேற்று காலை 6 மணியளவில் சீல் வைக்கப்பட்டது. கொட்டும் மழையில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி முன்னிலையில், நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

ஊட்டி மாரியம்மன் கோவில் முன்பகுதியில் இருந்த கடைகளுக்கு சீல் வைக்கும் போது, வியாபாரிகள் சீல் வைப்பதை தடுத்து நிறுத்தியதோடு நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகளுக்கு சீல் வைப்பது நிறுத்தப்பட்டது. இந்த தகவல் அறிந்த கடை வியாபாரிகள் அங்கு திரண்டனர். அவர்கள் கடைகளுக்கு சீல் வைத்ததை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளின் குறுக்கே வாகனம், சரக்கு வாகனங்களை நிறுத்தினர். அதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதையடுத்து வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டன. பின்னர் வியாபாரிகள் மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் இருந்து புளுமவுண்டன் சாலைக்கு ஊர்வலமாக மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி சென்றனர். அங்கு மார்க்கெட் நுழைவுவாயில் முன்பகுதியில் வியாபாரிகள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதுதொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் 10 மணிக்கு பேசி தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊட்டி நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், முஸ்தபா, ராஜா முகமது ஆகியோர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, நகராட்சி வருவாய் அதிகாரி பாஸ்கர், போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை மொத்த தொகையில் ரூ.8 கோடியை செலுத்த வியாபாரிகள் முன்வந்தனர். ஆனால், அரசு உயர்த்திய ரூ.13 கோடியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருப்பதால், உடனே விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் சட்டசபையில் இதுகுறித்து பேசி அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். சீல் வைக்கப்பட்ட 32 கடைகளின் நிலுவையில் உள்ள வாடகையை செலுத்துவதுடன் கூடுதலாக தொகை செலுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சீல் வைக்கப்பட்ட 32 கடைகளிலும் சீல்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளும் திறக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி பணியாளர் சங்க உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாததால் பணியாளர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. மேலும் நகராட்சி வாகனங்களுக்கு நிரப்பப்பட்ட டீசல் தொகை ரூ.25 லட்சம் செலுத்த முடியவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.45 லட்சம் பண பலன்கள் வழங்க முடியாமலும், 7-வது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட சம்பள நிலுவைத்தொகை ரூ.20 லட்சம் பணியாளர்களுக்கு வழங்க முடியாமலும் உள்ளது. பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் எடுப்பதற்கான தொகையும், மின்கட்டணமும் ரூ.7 கோடி பாக்கி இருக்கிறது. உயர்த்தப்பட்ட சம்பளம் பணியாளர்களுக்கு வழங்கப்படாததால், எங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க கஷ்டப்படுகிறோம். எனவே, பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது
குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. பழனி அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் மறியல்
பழனி அருகே, சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் 15–ந் தேதி மறியல்; பொதுமக்கள் அறிவிப்பு
ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் 15–ந் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.
4. மேலூர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் சாலைமறியல்
ஒருபோக பாசன பகுதியின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. அவினாசி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம்: பொதுமக்கள் சாலைமறியல் வீடு புகுந்து தாக்கிய 10 பேர் கைது
அவினாசி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக வீடுபுகுந்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வீடுபுகுந்து தாக்கியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.