திரு.வி.க. நகர் மண்டலத்தில் சேதம் அடைந்த குப்பை தொட்டிகளை மாற்ற வேண்டும்


திரு.வி.க. நகர் மண்டலத்தில் சேதம் அடைந்த குப்பை தொட்டிகளை மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:30 AM IST (Updated: 13 Jun 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

திரு.வி.க. நகர் மண்டலத்தில் சேதம் அடைந்து இருக்கும் குப்பை தொட்டிகளை அகற்றி புதிய குப்பை தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க சுற்றுச்சூழலும், சுகாதாரமும் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய வீதிகளிலும், சாலைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி சில இடங்களில் 1 முதல் 5 குப்பை தொட்டிகள் வரை வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் மூலம் எடுத்து சென்று கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.

திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூர், திரு.வி.க. நகர், பெரம்பூர், புளியந்தோப்பு, ஓட்டேரி, அயனாவரம் பகுதிகளில் சுமார் 800-க்கும் அதிகமான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த குப்பை தொட்டிகள் கடந்த 2013-2014-ம் நிதி ஆண்டில் புதிதாக வாங்கப்பட்டு தேவைக்கேற்ப ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அவற்றில் பெரும்பாலான குப்பை தொட்டிகள் உடைந்தும், ஓட்டைகள் விழுந்தும் காணப்படுகின்றன.

சேதம் அடைந்த குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்டினால், அதில் இருந்து குப்பைகள் வெளியேறி விடுகிறது. அந்த குப்பைகளை நாய்களும், மாடுகளும் சாலைகளுக்கு கொண்டுசென்று அந்த பகுதியையே குப்பைகளாக்கி விடுகிறது.

மேலும், குப்பைதொட்டிகள் சேதம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் குப்பைகளை, குப்பை தொட்டிகளில் போடாமல் அதன் அருகில் வைத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின்பிரிட்ஜ், திரு.வி.க. நகர், பெரவள்ளூர் பகுதிகளில் பெரும்பாலான குப்பை தொட்டிகள் உடைந்து கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் சேதம் அடைந்து இருக்கும் குப்பை தொட்டிகளை அகற்றி புதிய குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story