பணிச்சுமையால் அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி


பணிச்சுமையால் அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 Jun 2018 4:15 AM IST (Updated: 13 Jun 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசு பஸ் கண்டக்டர் பணிச்சுமையால் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக வஞ்சினிப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம்(49) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் இருந்து ராமேசுவரம் சென்ற பஸ்சில் கண்டக்டராக இருந்துள்ளார். பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று இரவு தங்கி, திரும்பவும் நேற்று திருப்பத்தூர் வந்து தனது 2 நாள் பணியை நிறைவு செய்து பணிமனைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் பணிமனை மேலாளர் சுப்பிரமணியன், மீண்டும் சிவகங்கை வழித்தடத்தில் கூடுதல் வேலை பார்க்குமாறு முருகானந்தத்தை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது உடல் நிலை காரணம் காட்டி விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் மேலாளர் விடுமுறை கொடுக்கவில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான முருகானந்தம், பணிமனை முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது இதனை பார்த்த மற்ற ஊழியர்கள் ஓடிவந்து அவரை தடுத்துள்ளனர். உடனே இதுகுறித்து தகவல் அறிந்த அலுவலக ஊழியர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மீது பணிச்சுமை ஏற்படுத்தி மேலாளர் துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தனர். மேலும் சில ஊழியர்கள் பஸ்களை இயக்க மறுத்து புறக்கணித்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் சரிசெய்த பின்னர் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதுகுறித்து மேலாளர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, அரசின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டும், அரசின் ஆணைப்படியும் வேலை வாங்க வேண்டியுள்ளது என்றார்.


Next Story