குழந்தைகளை பணி அமர்த்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
குழந்தைகளை பணி அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை,
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கியது. கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல் குறித்து நடைபெற்ற கவிதை, கட்டுரை, ஓவியம், விழிப்புணர்வு வாசகம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். கட்டுரைப்போட்டியில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காவியா முதல் பரிசும், கேப்ரன்ஹால் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.பிரியதர்ஷினி 2–வது பரிசும், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.ஹரிஹரன் 3–வது பரிசும் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.கார்த்தியாயினி முதல் பரிசும், நேரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜீவா 2–வது பரிசும், ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி மாணவி தி.தி.அனிதா ஸ்ரீ 3–வது பரிசும் பெற்றனர். ஓவியப்போட்டியில் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.கார்த்திகேயன் முதல் பரிசும், ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.சிவதாரிணி 2–வது பரிசும், ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி மாணவன் வி.முனீஸ்வரன் 3–வது பரிசும் பெற்றனர்.
மேலும் விழிப்புணர்வு நிகழ்வில் சுவர் ஓவியம் வரைந்த எம்.எம்.மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் எம்.முத்துமாணிக்கம் மற்றும் எம்.எம். மேல்நிலைப்பள்ளி பிளஸ்–1 மாணவர்கள் எஸ்.சிவபாண்டி, எஸ்.விக்னேஷ்வரன், சேதுபதி மேல்நிலைப்பள்ளி பிளஸ்–2 மாணவர் பி.வீரமணி ஆகியோர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய மதுரை மாநகராட்சி முதன்மை நகர்நல அலுவலர் வி.சதீஷ்ராகவன் முதல் பரிசு பெற்றார். தே.கல்லுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2–ம் பரிசும், ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு 3–ம் பரிசும், சிறந்த பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர், 2–ம் சரகம் வெ.சரோஜா மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர், 9–ம் சரகம் எஸ்.தயாநிதி ஆகியோருக்கும் கலெக்டர் பரிசுகள் வழங்கினார். முன்னதாக கலெக்டர் கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.