பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 7:45 PM GMT)

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை மற்றும் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவற்றால் மதுக்கடைகள் மூடுவதும், திறக்கப்படுவதுமாக உள்ளது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி பணி மூப்பு அடிப்படையில் கடைப்பணி வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

உபரி ஊழியர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியமர்த்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினரை இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தில் இணைத்திட வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் அப்பாசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story