மணல் கடத்தலுக்கு ஆதரவா? 4 போலீசார் பணியிட மாற்றம்


மணல் கடத்தலுக்கு ஆதரவா? 4 போலீசார் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:00 PM GMT (Updated: 12 Jun 2018 8:30 PM GMT)

மணல் கடத்தலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 4 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் வில்லியனூர் சங்கராபரணி ஆறு, பாகூர் தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலம் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது.

இதற்கு சில அதிகாரிகள், போலீசார் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கவர்னர் கிரண்பெடி மற்றும் போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார்கள் சென்றன. இதையடுத்து மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் சட்டம்–ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீசார் 4 பேர் மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக காவல்துறை தலைமைக்கு புகார்கள் சென்றன. இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் அந்த போலீசாரை அழைத்து ரகசியமாக விசாரித்தார்.

அப்போது அவர்களது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் ஒரு வார காலத்திற்கு காவல்துறை தலைமையகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட அவர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் 4 பேரும் புதுவையில் உள்ள காவல்துறை தலைமையக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story