புதுச்சேரி பட்ஜெட் குறித்து நாராயணசாமி ஆலோசனை
புதுவை பட்ஜெட் குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை மாநில திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட ரூ.7,530 கோடிக்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக சில விளக்கங்களை மத்திய அரசு புதுவை அரசிடம் கேட்டது.
பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால் கடந்த 4 மற்றும் 5–ந்தேதிகள் மட்டும் நடந்த புதுவை சட்டமன்ற கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் கேள்விகள் தொடர்பாக நேரடியாக விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து விரைவில் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் புதுவை பட்ஜெட் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று காபினட் அறையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, நிதித்துறை செயலாளர் கந்தவேலு மற்றும் அரசு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.