மாவட்ட செய்திகள்

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் எச்சரிக்கை + "||" + 2 year jail collector warns if you hire child laborers

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் எச்சரிக்கை
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்தார்.
புதுக்கோட்டை,

தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தாமரை உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சைல்டுலைன் 1098-ன் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழ ராஜவீதி, பிருந்தாவனம் வழியாக டவுன்ஹாலில் நிறைவுபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வனஜா குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை வாசிக்க, அதனை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் திரும்பக்கூறி உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.