கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மா.கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கம்பம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ‘போராடுவோம் தமிழகமே‘ என்ற பிரசார வாகன பயணம், கடந்த 9-ந்தேதி குமரி மாவட்டம் கொள்ளங்கோட்டில் தொடங்கியது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பிரசார வாகனத்தில் சென்று ஆங்காங்கே நிலவும் சமூக பிரச்சினைகள், அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி தேனி மாவட்டம் கம்பத்துக்கு நேற்று முன்தினம் இரவு பிரசார வாகனம் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து கம்பம் பார்க் திடலில் நேற்று காலை மக்கள் சந்திப்பு பிரசார இயக்க தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராஜ் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தேனி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். குளம், கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். ரேஷன்கடைகளில் அரிசி வினியோகம் செய்ய வேண்டும். திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கம்பத்தின் முக்கிய வீதிகளில் பிரசாரத்தை முடித்து விட்டு புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் வழியாக பெரியகுளத்துக்கு வாகனம் சென்றது.
முன்னதாக முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். புதிதாக யாரையும் கைது செய்யக்கூடாது. கோவையில் நடந்த நிகழ்ச்சிக்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனம், இயக்குனர் அமீர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகும். அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
இதேபோல் மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்பினாலோ, அறிக்கை வெளியிட்டாலோ, அரசாங்கத்தை கண்டித்து பேசினாலோ கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது போன்ற கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு கைவிட வேண்டும். மக்களின் கருத்துகளை கேட்காமல் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. அரசு பள்ளிகளை மூடாமல் அதனை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story