மார்ஷல் நேசமணி பிறந்தநாள்: உருவச்சிலைக்கு கலெக்டர்- அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


மார்ஷல் நேசமணி பிறந்தநாள்: உருவச்சிலைக்கு கலெக்டர்- அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 13 Jun 2018 4:15 AM IST (Updated: 13 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவச்சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணைய போராடியவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் மார்ஷல் நேசமணி. குமரித்தந்தை என்று அழைக்கப்படும் இவருக்கு நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள நேசமணியின் மார்பளவு சிலைக்கு அரசு சார்பில் அவருடைய பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்தநிலையில் மார்ஷல் நேசமணியின் 124-வது பிறந்தநாள் விழா குமரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி மணி மண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் சென்றிருந்த கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத்தும் நேசமணி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி- மக்கள் தொடர்பு அதிகாரி கலையரசன், நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, மார்ஷல் நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி (விளம்பரம்) செல்வலெட் சுஷ்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் என்ஜினீயர் அலெக்ஸ், நிர்வாகிகள் மகேஷ்லாசர், வைகுண்டதாஸ், அசோக்ராஜ், டான்போஸ்கோ, ராஜதுரை, ஜெரால்டு கென்னடி, காலபெருமாள், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சான்றோர் நாடார் சங்கம் சார்பில் மணிமண்டபத்தில் உள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ரெஜிசிங் தலைமை தாங்கினார். நாடார் தேசிய பேரவை மாநில பொதுச்செயலாளர் வின்ஸ்லி, நாடார் மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்ட தலைவர் வைரக்கனி, வள்ளியூர் நாடார் மகாஜன சங்க தலைவர் ஜோபின், சான்றோர் நாடார் சங்க நிர்வாகிகள் சி.எல்.ஜோ, சந்திரசேகரபாண்டியன், விஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் வேறு சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சங்கங்களை சேர்ந்தவர்களும் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story