மாவட்ட செய்திகள்

தொரப்பாடியில் கைதிகள் நடத்தவுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் + "||" + In torappati The petrol station to hold prisoners

தொரப்பாடியில் கைதிகள் நடத்தவுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம்

தொரப்பாடியில் கைதிகள் நடத்தவுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம்
வேலூர் தொரப்பாடியில் கைதிகள் நடத்தப்பட உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தைச் சிறை துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆய்வு செய்தார்.

வேலூர்,

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது. இங்கு, 800–க்கும் மேற்பட்டவர்கள் தண்டனை கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் உள்ளனர். கைதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சிறை துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வேலூர் ஜெயில் வளாகத்தில் உள்ள காலி நிலத்தில் கத்திரி, வெண்டை, கொத்தவரை, அகத்திக்கீரை, கரும்பு போன்றவை இயற்கையான முறையில் பயிரிடப்பட்டு, அவை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜெயில் விற்பனை மையம் அருகில் முடி திருத்தகம் (சலூன்) மற்றும் துணிகளை தேய்த்து (அயர்ன்) தருவதற்கான கடை, ஓட்டல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஜெயில் கைதிகளை கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையம் (பங்க்) அமைக்க சிறை துறை முடிவு செய்தது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் சிறை துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் சார்பில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வேலூரில் தொரப்பாடி போலீஸ் குடியிருப்பு அருகே சிறை துறைக்குச் சொந்தமான 2 ஆயிரம் சதுர அடி இடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று வேலூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைய உள்ள இடத்தை சிறை துறைத்தலைவர் மற்றும் சிறை துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ஜெயிலில் உள்ள நன்னடத்தைக் கைதிகள் மற்றும் ஜெயிலில் இருந்து விடுதலையாகும் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையம் 24 மணி நேரமும் இயங்கும். அதில் ஏ.டி.எம். மையம், ஆவின் பாலகம், உணவகம் ஆகியவை அமைக்கப்படும். கடந்த ஆண்டு கைதிகள் மூலம் சிறை துறைக்கு ரூ.60 கோடி லாபம் கிடைத்துள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையம் அமைத்தால் அதிக லாபம் கிடைக்கும், என்றார்.

ஆய்வின்போது இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் வேலூர் மேலாளர் சவுரவ் ஆனந்த், ஜெயில் கண்காணிப்பாளர் (பொறுப்பு) முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.