புளியங்குடி அருகே கார் மரத்தில் மோதியது: மீன் வியாபாரிகள் 2 பேர் பலி குற்றாலம் சென்று திரும்பியபோது பரிதாபம்


புளியங்குடி அருகே கார் மரத்தில் மோதியது: மீன் வியாபாரிகள் 2 பேர் பலி குற்றாலம் சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Jun 2018 9:30 PM GMT (Updated: 13 Jun 2018 12:52 PM GMT)

புளியங்குடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய மீன் வியாபாரிகள் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்த

புளியங்குடி, 

புளியங்குடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய மீன் வியாபாரிகள் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீன் வியாபாரிகள்

நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்தவர்கள் காசிராஜன் மகன் ராஜா (வயது 39), சந்திரபாபு மகன் செந்தில் (36), ஆறுமுகம் மகன் வரதராஜ் (42), நடுக்காட்டான் மகன் நாகராஜ் (48). நண்பர்களான இவர்கள் 4 பேரும் மீன் வியாபாரிகள் ஆவர். இவர்கள் பூம்புகாரில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீன்களை விற்பனைக்காக அனுப்புவது வழக்கம். பின்னர் அவர்கள், கேரள மாநிலத்துக்கு சென்று வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்து வந்தனர்.

நேற்று முன்தினம் ராஜா, செந்தில், வரதராஜ், நாகராஜ் ஆகிய 4 பேரும் கேரள மாநிலத்துக்கு சென்று பணத்தை வசூல் செய்ய திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் வரதராஜின் காரில் புறப்பட்டு சென்றனர்.

கார் மரத்தில் மோதியது

கேரள மாநிலத்தில் பணத்தை வசூல் செய்த பின்னர், அவர்கள் அனைவரும் இரவில் நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு சென்று அருவியில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள், இரவில் பூம்புகாருக்கு காரில் புறப்பட்டனர். வரதராஜ் காரை ஓட்டிச் சென்றார். இரவு 12.30 மணிக்கு புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ராஜா, செந்தில் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வரதராஜ், நாகராஜ் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவாறு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த வரதராஜ், நாகராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த ராஜா, செந்தில் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story