திருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்


திருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 14 Jun 2018 2:30 AM IST (Updated: 13 Jun 2018 8:01 PM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது.

ஏர்வாடி, 

திருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த உடைப்பை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரிய குளம் சீரமைப்பு 

ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள கொடிமுடியாறு அணை நிரம்பியது. மேலும் திருக்குறுங்குடி பெரிய குளம், தாமரை குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பின. திருக்குறுங்குடி பெரிய குளத்தின் கரையில் நடுமடை பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து வருவாய் துறையினர் நேற்று திருக்குறுங்குடி பெரிய குளத்தை பார்வையிட்டனர். பின்னர் பெரிய குளத்தின் நடுமடை பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தில் மண் நிரப்பி தற்காலிகமாக சீரமைத்தனர். திருக்குறுங்குடியில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்று வீசியது. இதில் திருக்குறுங்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்ற பழமையான மாமரம் சரிந்து விழுந்தது.

கால்வாய் உடைப்பை... 

திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூருக்கு மேற்கே உள்ள செங்குளாகுறிச்சி கால்வாயில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு மணல் மூடைகளை அடுக்கி வைத்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழையில் செங்குளா குறிச்சி கால்வாயில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மூடைகளை தண்ணீர் இழுத்து சென்றது.

இதனால் அந்த வழியாக வெளியேறும் தண்ணீரானது நடுச்சேணி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது. எனவே கால்வாய் கரையில் உடைப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story