மாவட்ட செய்திகள்

சென்னை மாநகர ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றியது: குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படுமா? + "||" + Water mangled in Chennai municipal bore wells

சென்னை மாநகர ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றியது: குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படுமா?

சென்னை மாநகர ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றியது: குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படுமா?
சென்னை மாநகர பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றியதுடன், மாநகர பகுதியில் வீடுகளிலும், பொதுகுழாய்களிலும் குடிநீர் குறைவாக வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை,

சென்னை மாநகரில் உள்ள 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர 24 ஆயிரத்து 712 தெருக்குழாய்கள் உள்ளன. இதற்கு தேவையான தண்ணீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் 4 ஏரிகளிலும் சேர்த்து 2.624 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்து மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் சோழவரம் ஏரி வறண்டு கிடந்தது. மீதம் உள்ள 3 ஏரிகளிலும் சேர்த்து 156 மில்லியன் கன அடி மட்டும் இருப்பு இருந்தது. தற்போதும் சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாதபடி வறண்டு விடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பூண்டி ஏரியில் தற்போது 179 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பதால் தினசரி 30 கன அடி வீதம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதேபோன்று புழல் ஏரியில் இருந்து 125 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 118 கன அடி வீதமும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது.

கடல்நீரை குடிநீராக்கும் மையம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குடிநீர் வரத்து மிகவும் குறைந்து உள்ளது. குறிப்பாக புரசைவாக்கம் சுந்தரம்பிள்ளை தெருவை சுற்றியுள்ள ஒரு சில தெருக்களில் உள்ள வீடுகளில் மாதக்கணக்கில் தண்ணீர் வராத நிலையும் காணப்படுகிறது. தெருக்களில் உள்ள பொதுகுழாய்களிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் போதிய குடிநீர் சீராக வழங்க சென்னை குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 142 கிணறுகளில் உள்ள நீர் மட்டத்தை கொண்டு நிலத்தடி நீர் மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் இந்த கிணறுகளில் தற்போது நீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிகிறது. எனவே 8 மணி நேரத்துக்கு ஒரு முறை தான் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான அடுக்கு மாடி குடியிருப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமான ஆழத்தில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் எடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.