பணிப்பதிவேடுகள் கணினிமயாக்கப்படுவதால் அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தாமதமின்றி கிடைக்கும்


பணிப்பதிவேடுகள் கணினிமயாக்கப்படுவதால் அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தாமதமின்றி கிடைக்கும்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:00 PM GMT (Updated: 13 Jun 2018 6:48 PM GMT)

பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படுவதன் மூலம் அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தாமதமின்றி கிடைக்கும் என்று கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவஹர் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் சம்பள பட்டியல் தயாரித்தல், மின் பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல், பட்டியல் கடவு செய்தல், காப்பறை செயல்பாடுகள், முத்திரைத்தாள்கள் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதை சென்னை கருவூல மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளரும் ஆணையருமான ஜவஹர் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:–

நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற மாநில அரசு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூல பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.288 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிக்கப்பட்டு கணினிமயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இத்திட்டம் வருகிற அக்டோபர் மாதம் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசு பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக கணினிமயமாகிறது.

மேலும் பணிப்பதிவேடுகளை பராமரிக்கும் பணியில் இருந்து விடுபட்டு அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட முடியும். இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் காலவிரயம் குறைவதோடு பணிப்பதிவேடு காணாமல் போகக்கூடிய சூழ்நிலை முடிவுக்கு வரும். பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 40 ஆயிரத்து 113 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story