ஆலடி பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை


ஆலடி பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 14 Jun 2018 4:00 AM IST (Updated: 14 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆலடி பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே மணக்கொல்லை, இருளக்குறிச்சி, மோகாம்பரிக்குப்பம், பூண்டியாங்குப்பம், நடியப்பட்டு, பாலக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கிணற்று பாசனம் மற்றும் நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்து பராமரித்து வந்தனர்.

தற்போது அந்த நெற்பயிர்கள் பூ பூக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் போதிய அளவில் மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் கிணறுகளிலும் மளமளவென தண்ணீர் வற்றி தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெற்பயிர்கள் முழுவதுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.

இந்த நிலையில் நிலத்தடி நீர் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி ஆலடி பகுதியில் 100–க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பராமரித்து வந்த நெற்பயிர்கள் தங்கள் கண் முன்னே கருகி வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், என்.எல்.சி சுரங்கம் அருகில் இருப்பதால் சுரங்கம் தோண்டும் போது பெரிய மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சு விடுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

மேலும் தொடர் மின் தடையால் பயிர்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளோம். ஆனால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வருவதால், செலவு செய்த தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story