மானை வேட்டையாடி இறைச்சி விற்பனை 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு அபராதம்


மானை வேட்டையாடி இறைச்சி விற்பனை 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:30 PM GMT (Updated: 13 Jun 2018 7:53 PM GMT)

மானை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிப்பாளையம் சாலை, ஸ்ரீரங்கராயன் ஓடைபகுதியில் மான் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மேட்டுப்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் தலைமையில், வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் அண்ணாமலை, பிரகாஷ் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பகுதியை சேர்ந்த பாலன் மனைவி அபிலா என்ற பிரேமா (வயது 27), கணேசன் மனைவி பிரேமா (28), கருப்பசாமி மனைவி நஞ்சம்மாள் (74) ஆகியோர் வீட்டில் சுமார் 4 கிலோ மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் அவர்களிடம் இருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜ்குமார் (23) என்பவர் அபிலா மூலம் மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை வனத்துறையினர் பிடித்தனர்.

விசாரணையில், பவானி ஆற்றங்கரை ஓரத்தில் மானை நாய் வேட்டையாடி கொண்டிருந்தது. இதனை கண்ட அவர் அங்கிருந்து மான் இறைச்சியை எடுத்து வந்து தனக்கு தெரிந்த அபிலா மூலம் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்படி, ராஜ்குமார், அபிலா ஆகியோருக்கு அபராதமாக தலா ரூ.20 ஆயிரமும், பிரேமா, நஞ்சம்மாள் ஆகிய இருவருக்கும் அபராதமாக தலா ரூ.5 ஆயிரமும் விதிக்கப்பட்டது.


Next Story