செல்போனில் படம் எடுத்த போது பரிதாபம்: ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் கதி என்ன?
வால்பாறையில் நண்பர்களுடன் வெள்ளமலை டனல் ஆற்றுக்கு சென்றவர் செல்போனில் படம் எடுக்கும் போது ஆற்றில் தவறி விழுந்தார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 35). இவர் தனது மனைவி ஜீவலதா (33) மற்றும் குழந்தைகளுடன் வால்பாறை ராஜீவ்காந்தி நகரில் வசித்து வந்தார். இவர் சொந்தமாக சுற்றுலா வேன் வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் முதல் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை டனல் ஆற்றுப்பகுதியில் அதிகளவு தண்ணீர் கொட்டுவதால் அதை பார்த்து ரசிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
பின்னர் அந்த ஆற்றுப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பி வேலி மீது ஏறி நின்று கொண்டு தனது நண்பர்களிடம் தனது செல்போனை கொடுத்து புகைப்படம் எடுக்க சொன்னதாகவும், அப்போது கால்தவறி ஆற்றில் விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது நண்பர்கள் ஜெயப்பிரகாசின் மனைவி ஜீவலதாவிடம் கூறியுள்ளார்கள்.
இதுகுறித்து ஜீவலதா வால்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஜெயப்பிரகாசுடன் சென்றவர்களை அழைத்து விசாரணை நடத்தினார். புகைப்படம் எடுக்கும்படி கூறி எங்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு தடுப்பு கம்பிமீது ஏறியபோது கால்தவறி வெள்ளமலை டனல் ஆற்றில் விழுந்து விட்டதாகவும், அவரை மீட்பதற்கு முயற்சித்ததாகவும், ஆனால் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர் ஆற்றுத் தண்ணீர் ஜெயப்பிரகாசை அடித்து சென்றுவிட்டதாகவும் போலீசில் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வால்பாறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், வால்பாறை மற்றும் நல்லகாத்து எஸ்டேட் பகுதி மக்களும், உறவினர்களும் தொடர்ந்து ஜெயப்பிரகாசை தேடி வருகின்றனர்.
வால்பாறை பகுதியில் மழைபெய்து கொண்டிருப்பதால் வெள்ளமலை டனல் ஆறு உட்பட சோலையார் அணைப்பகுதிக்கு செல்லும் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஜெயப்பிரகாசை தேடுவதில் சிக்கில் நீடிக்கிறது. தொடர்ந்து வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் ஆற்றங்கரை ஓரப்பகுதிகளிலும் அவரை தேடும்படி பணி நடைபெற்று வருகிறது.