பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முற்றுகை, அய்யாக்கண்ணு பங்கேற்பு


பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முற்றுகை, அய்யாக்கண்ணு பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 4:15 AM IST (Updated: 14 Jun 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் அனைத்தும் குன்னூரிலுள்ள அரசு தனியார் ஏல மையங்கள் முலம் விற்பனை செய்யயப்பட்டு வருகிறது. பசுந்தேயிலைக்கு உரிய விலை வேண்டுமென வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் படுக தேச கட்சியின் மாநில தலைவர் மஞ்சை மோகன் தலைமையில் நேற்று குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் நதிநீர் இணைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டார்.

முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமுர்த்தி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, வெளி மார்க்கெட்டில் தேயிலை தூளின் விலை ரூ.500–ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு வழங்க கூடிய பசுந்தேயிலைக்குண்டான விலையை வழங்காமல் உற்பத்தியாளர்கள் அலைக்கழித்து வருவதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேயிலை வாரியத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:– தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். உற்பத்தி செலவு மற்றும் தொழிலாளர் செலவு என பல வகையில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். இதில் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.50 வரை விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு தடையின்றி வழங்கும் வகையில் தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி அதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல்இயக்குனர் பால்ராசு அவர்களிடம் கூறினார்.


Next Story