புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் தொடங்கப்படும் முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் தொடங்கப்படும் முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 4:45 AM IST (Updated: 14 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் தொடங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசு தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் உயர் கல்வி கண்காட்சி கடற்கரை காந்திடலில் கடந்த 11–ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சான்றிதழ் வழங்கினார். மேலும் கட்டிட தொழிலாளர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

புதுச்சேரி சிறிய மாநிலம். 12½ லட்சம் மக்கள் தொகை உள்ளனர். புதுவை 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உள்ளது. இதற்கு காரணம் சிறிய மாநிலமான புதுவையில் 18 என்ஜினீயரிங் கல்லூரிகள், 9 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் கற்றுக்கொடுக்கும் கல்லூரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.

புதுவை அரசு தொழிலாளர் துறை மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதுவையில் 100 சதவீதம் மாணவர்கள் திறம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் 60 கோடி பேருக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்தார்.

புதுவை மாநிலத்தில் கடந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி பெற்றவர்களில் 1850 பேர் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர் துறை மூலம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 800 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

புதுவையில் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நம்மிடம் நிலம் உள்ளது. அதனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ நம்மிடம் அதிகாரம் இல்லாமல் இருந்தது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொழில் தொடங்க செல்லும் நிறுவனங்களுக்கு இலவசமாக நிலங்களை வழங்கி வருகின்றனர். எனவே தான் நாம் தற்போது புதிய தொழிற்கொள்கையை கொண்டு வந்து சில விதிகளை மாற்றி அமைத்துள்ளோம்.

இதன் அடிப்படையில் தனியார் தொழிற்சாலைகள் புதுவைக்கு வரும்போது அதில் 60 சதவீத வேலைவாய்ப்பு புதுவையில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். புதுவையில் 30 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இனி வரும் காலங்களில் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. எனவே தனியார் நிறுவனங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுவையில் என்ஜினீயரிங் படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தொழிலாளர்கள் மாநாட்டிற்கு சென்றேன். அங்கு சென்னையை சேர்ந்த தனியார் கணினி நிறுவனத்தினரை சந்தித்து பேசி உள்ளேன். அதில் ஒரு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் புதுவையில் தகவல் தொழில்நுட்ப தொழில்பூங்கா தொடங்க ஆர்வம் காட்டியுள்ளார். அது விரைவில் தொடங்கப்படும். அவ்வாறு அமைக்கப்பட்டால் புதுவையை சேர்ந்த படித்த 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புதுவையில் கல்வியின் தரத்தை உயர்த்த புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ்–2 முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்புகளுக்கு செல்லும்போது ஆன்–லைன் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த 40 ஆயிரம் பேர் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மத்திய அரசு நமக்கு தேவையான நிதியை கொடுக்காமல் இருந்தாலும், நானும் அமைச்சர்களும் தொடர்ந்து மத்திய மந்திரிகளை சந்தித்து 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.1850 கோடி புதுவைக்கு பெற்று வந்தோம். 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு ரூ.500 கோடியும், சுற்றுலாவை மேம்படுத்த ரூ.100 கோடியும், சாகர் மாலா திட்டத்திற்கு ரூ.44 கோடியும் பெற்று வந்துள்ளோம். புதுவைக்கு பல்வேறு திட்டங்களை நாம் கொண்டு வந்தாலும் அதற்கு ஒரு முட்டுக்கட்டை உள்ளது. அதனை விரைவில் சரி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story