திருவானைக்காவல் மேம்பாலம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்


திருவானைக்காவல் மேம்பாலம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்
x
தினத்தந்தி 14 Jun 2018 4:30 AM IST (Updated: 14 Jun 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் மேம்பாலம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்று ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ராஜாமணி கூறினார்.

திருச்சி,

திருச்சி- ஸ்ரீரங்கம் இடையே திருவானைக்காவலில் இருந்த மிகவும் பழமையான, குறுகலான ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக அதே இடத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 1-10-2016 அன்று தொடங்கியது. இதற்காக அந்த பாலம் மூடப்பட்டு போக்குவரத்து ஏற்கனவே அமைக்கப்பட்ட அணுகுசாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 1430 மீட்டர்கள் ஆகும். அகலம் 17.20 மீட்டராகும்.

பாலம் கட்டுமான பணிக்காக ரூ.47 கோடி, நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்குவதற்காக ரூ.78 கோடி என மொத்தம் ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலமானது மொத்தம் 210 அடித்தள தூண்கள் மற்றும் 48 தலைப்பகுதி தூண்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் சென்னை-திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும், கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தடமாகவும் கட்டப்பட்டு வருகிறது.

பாலம் கட்டுமான பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவானைக்காவல் மேம்பாலத்தை பொறுத்தவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் சில பணிகள் தான் நிலுவையில் உள்ளன. அந்த பணிகளும் விரைவாக செய்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். எனவே ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டு அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களும் இயக்கப்படும்.

இந்த பாலம் பணிகளை பொறுத்தவரை 2018 ஜனவரி மாதம் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்துதல், நிர்வாக அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதங்களை தொடர்ந்து கூடுதலாக 6 மாதங்கள் ஆகி உள்ளது. இந்த பாலத்திற்கான அணுகு சாலை பணிகள் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இதற்கான டெண்டர் அடுத்த மாத இறுதியில் விடப்படும். அதில் இருந்து 6 மாத காலத்திற்குள் திருச்சி- சென்னை பகுதி, கல்லணை பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் அணுகுசாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடையும். அணுகுசாலைகள் 7 மீட்டர் அகலத்தில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) நாகராஜன், உதவி கோட்ட பொறியாளர் வீரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story