ரெயில் என்ஜின் மோதி 4-ம் வகுப்பு மாணவி சாவு: சாகர் அருகே சோக சம்பவம்


ரெயில் என்ஜின் மோதி 4-ம் வகுப்பு மாணவி சாவு: சாகர் அருகே சோக சம்பவம்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:40 PM GMT (Updated: 13 Jun 2018 10:40 PM GMT)

சாகர் அருகே சோதனை ஓட்டம் நடந்த போது ரெயில் என்ஜின் மோதி 4-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.

சிவமொக்கா,

ரெயில் என்ஜின் மோதி 4-ம் வகுப்பு மாணவி பலியான சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா அனந்தபுரம்-அந்தாசுரம் இடையே ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தது. இதைதொடர்ந்து அந்த தண்டவாளத்தில் ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் சாகர் அருகே அந்தாசுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை ஒரு சிறுமி கடக்க முயன்றாள். அந்த சமயத்தில் ரெயில் என்ஜின் சிறுமி மீது மோதியது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தாள். உடனே அந்தப் பகுதி மக்கள் அவளை மீட்டு, அனந்தபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமி ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் வழியிலேயே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். இதுபற்றி தகவல் அறிந்ததும் அனந்தபுரம் ரெயில்வே போலீசாரும், அனந்தபுரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரெயில் என்ஜின் மோதி பலியானது, அனந்தபுரத்தை சேர்ந்த கீர்த்தனா (வயது 10) என்பதும், இவள் அனந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து கீர்த்தனா வீட்டுக்கு திரும்பும் வழியில் தண்டவாளத்தை கடக்க முயன்றதும், அப்போது ரெயில் என்ஜின் மோதி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமி கீர்த்தனாவின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக அனந்த புரம் ரெயில்வே போலீசாரும், அனந்தபுரம் போலீசாரும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் என்ஜின் மோதி பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story