சரத்பவாரின் அரசியல், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது சிவசேனா விமர்சனம்


சரத்பவாரின் அரசியல், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 14 Jun 2018 5:45 AM IST (Updated: 14 Jun 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவாரின் அரசியல் மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக சிவசேனா விமர்சித்துள்ளது.

மும்பை,

புனே மாவட்டம் பீமா-கோரேகாவ் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் இரு பிரிவினருக்கு இடையே வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பொதுமக்கள் இடையே வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டி புனே உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேருக்கும் நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பரிபா பகுஜன் மகாசங்கத்தின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்பட நாடு முழுவதும் இருந்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே புனேயில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 19-வது ஆண்டு நிறுவன நாள் விழாவில் பங்கேற்று பேசிய அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியான சரத்பவார், சில முற்போக்கான சமூக செயற்பாட்டாளர்களை அரசாங்கம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி கைது செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னாவில்’ இது குறித்து கூறியிருப்பதாவது:-

பீமா-கோரேகாவ் வன்முறையில் மராட்டியம் பற்றி எரிந்தபோது சம்பவ இடத்துக்கு வந்து மக்களை அமைதிப்படுத்த தவறிய சரத்பவார், தற்போது இந்த வன்முறைக்கு இந்துத்வா அமைப்புகள்தான் காரணம் என கூறி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

போலீசார் தவறான நபர்களை கைது செய்திருப்பதாக கூறுவதன் மூலம் சரத்பவார் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்?. போலீசாரின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதும், அவர்களது விசாரணை குறித்து கேள்வி எழுப்புவதும், முன்னாள் முதல்-மந்திரியான சரத்பவாருக்கு அழகல்ல. அவரது இந்த அரசியல் மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story