பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 28 அடி உயர்வு குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி


பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 28 அடி உயர்வு  குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 15 Jun 2018 2:30 AM IST (Updated: 14 Jun 2018 7:00 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 28 அடி உயர்ந்து உள்ளது. குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 28 அடி உயர்ந்து உள்ளது. குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே வாரத்தில் 28 அடி உயர்வு 

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நெல்லை மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 7–ந் தேதி அன்று 38.75 அடியாக இருந்தது. இடையில் பெய்த மழையின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று வரை 67.50 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 28.75 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு தற்போது ஆயிரத்து 517 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 288 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு அணையான சேர்வலாறு அணையின் நீர்மட்டம் கடந்த 7–ந் தேதி 21.72 அடியாக இருந்தது. நேற்று வரையில் அணையின் நீர்மட்டம் 113.35 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது ஒரே வாரத்தில் 91.63 அடி உயர்ந்து உள்ளது. இந்த அணைக்கு 693 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் ஒரே வாரத்தில் 11.28 அடி உயர்ந்து 83.90 அடியாக உள்ளது.

குண்டாறு அணை நிரம்பியது 

செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புள்ளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 36.10 அடியாகும். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குண்டாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு குண்டாறு அணை நிரம்பி தனது முழு கொள்ளளவான 36.10 அடியை தொட்டது. இந்த அணை மூலம் ஆயிரத்து 123 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நேரடியாக 731 ஏக்கரும், மறைமுகமாக 392 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. குண்டாறு அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story