அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை தச்சநல்லூர் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோடு அமைக்கும் பொதுமக்கள்


அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை தச்சநல்லூர் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோடு அமைக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Jun 2018 9:00 PM GMT (Updated: 14 Jun 2018 1:34 PM GMT)

அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தச்சநல்லூர் மேம்பாலம் கீழ் பொதுமக்கள் சர்வீஸ் ரோடு அமைத்து வருகிறார்கள்.

நெல்லை, 

அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தச்சநல்லூர் மேம்பாலம் கீழ் பொதுமக்கள் சர்வீஸ் ரோடு அமைத்து வருகிறார்கள்.

தச்சநல்லூர் மேம்பாலம் 

நெல்லை தச்சநல்லூரில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2014–ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்துக்கு கீழ் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். ரோடு அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. ஆனால் மற்றொரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தச்சநல்லூர் மேம்பாலம் கீழ் சாலைகள் குண்டும், குழியாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என வடக்கு பாலபாக்கியா நகரை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலை பொறியாளர் உள்ளிட்டோரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்கவில்லை 

4 ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு நலச்சங்கள் ஒன்றிணைந்து தச்சை மேம்பால சுற்றுப்புற நகர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பு மூலம் தச்சநல்லூர் மேம்பாலம் கீழ் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை பொதுமக்கள் நேற்று தொடங்கினர். அந்த பகுதியில் மணல்கள் கொட்டப்பட்டு உள்ளன. எந்திரங்கள் மூலம் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் முருகேசன் கூறும் போது, “கடந்த 4 ஆண்டுகளாக தச்சநல்லூர் மேம்பாலம் கீழ் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனு கொடுத்தால் அதிகாரிகள் பதில் கொடுக்கிறார்கள். ஆனால் சாலை அமைக்கப்படவில்லை.

2 ஆயிரம் குடும்பங்கள் 

தச்சநல்லூர் மேம்பாலம் கீழ் சுற்று வட்டார பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இரவு நேரங்களில் வீட்டுக்கு வர முடியவில்லை. அந்த அளவுக்கு சாலைகள் மோசமாக இருக்கிறது. வேறு வழியில்லாததால் நாங்களே சாலை அமைக்கிறோம். பொதுமக்களிடம் நிதி திரட்டி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நிரந்தரமான அரசு சாலை அமைக்க வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்“ என்றார்.

Next Story