அனல்மின்நிலைய திட்டத்தில் கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி கையாளும் தளம் அமைக்க கூடாது செயல்விளக்க கூட்டத்தில் மீனவர்கள் கடும் எதிர்ப்பு


அனல்மின்நிலைய திட்டத்தில் கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி கையாளும் தளம் அமைக்க கூடாது செயல்விளக்க கூட்டத்தில் மீனவர்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Jun 2018 2:30 AM IST (Updated: 14 Jun 2018 8:47 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அனல்மின்நிலைய திட்டத்திற்கு கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி கையாளும் தளம் அமைக்க கூடாது, என்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திட்ட செயல் விளக்க கூட்டத்தில் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்செந்தூர், 

உடன்குடி அனல்மின்நிலைய திட்டத்திற்கு கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி கையாளும் தளம் அமைக்க கூடாது, என்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திட்ட செயல் விளக்க கூட்டத்தில் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செயல் விளக்க கூட்டம் 

 உடன்குடி அனல் மின்நிலைய திட்டம் மற்றும் நிலக்கரி கையாளும் தளம் அமைப்பதற்கான திட்ட செயல் விளக்க கூட்டம் நேற்று மாலையில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் தலைமை தாங்கினார். அனல்மின்நிலைய திட்ட இயந்திரவியல் மேற்பார்வை பொறியாளர் ஞானகுரு, அனல்மின்நிலைய கட்டுமான மேற்பார்வை பொறியாளர் பாண்டியராஜன், உதவி கலெக்டர் தங்கவேலு, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன்(திருச்செந்தூர்), அண்ணாத்துரை(குலசேகரன்பட்டினம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் தரப்பில், தூத்துக்குடி மாவட்ட கட்டுமர நாட்டுபடகு மீனவர் சமுதாய சங்க தலைவர் கயஸ், மாவட்ட செயலாளர் திரேஸ்புரம் ராஜ், மாவட்ட பொருளாளர் புன்னக்காயல் யூஜின் ரொட்ரிகோ, மாவட்ட துணைத்தலைவர் ராயப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியூட்டன் பர்னாண்டோ, பெரியதாழை முன்னாள் பஞ்யாத்து தலைவர் ஜோசப் மற்றும் பெரியதாழை, மணப்பாடு, குலசேகரன்பட்டணம், கல்லாமொழி, ஆலந்தலை, அமலிநகர், வீரபாண்டியன்பட்டணம், சிங்கிதுரை, கொம்புதுரை, புன்னக்காயல், திரேஸ்புரம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார் உள்ளிட்ட 27 கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் கடும் எதிர்ப்பு 

கூட்டத்தில், உடன்குடி அனல் மின்நிலைய திட்டத்தில், கல்லாமொழி பகுதியில் அமைய உள்ள நிலக்கரி கையாளும் தளம் அமைப்பது குறித்தும், மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கடலில் பாலம் அமைக்கப்படும் என உடன்குடி அனல்மின்நிலைய திட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

 ஆனால் மீனவர்கள் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடன்குடி அனல்மின்நிலைய திட்டத்தில் கல்லாமொழி கடல்பகுதியில் நிலக்கரி யை£ளும் தளம் அமைக்க கூடாது. இந்த நிலக்கரி கையாளும் தளம் அமைக்கப்பட்டால் நிலக்கரி கப்பலில் கொண்டுவரப்படும் போது, மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். கப்பல் போக்குவரத்து நடந்தால் மீனவர்கள் வலைகள் சேதமடையும். மீன்பிடிக்க செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.

மீன்வளம் அழிந்துவிடும் 

மேலும், அனல் மின்நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல் நீர் மாசுப்படும். மீன்கள் செத்து மிதக்கும். இதனால் மீன்வளம் அழிந்துவிடும். இதனால் கடல் மாசுப்படுவதை தவிர்க்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் அனல்மின்நிலைய திட்டத்தை கைவிட்டுவிட்டு சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்துகின்றனர். எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த நிலக்கரி கையாளும் தளம் அமைக்க கூடாது என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story