ஆதரவற்ற நிலையில் இருக்கும் அம்மா உணவகங்கள் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஆதரவற்ற நிலையில் இருக்கும் அம்மா உணவகங்கள் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2018 10:15 PM GMT (Updated: 14 Jun 2018 7:14 PM GMT)

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவர் தொடங்கி வைத்த அம்மா உணவகங்கள் மிகவும் துடிப்போடு செயல்பட்டது. ஆனால் இன்றோ ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. மாநகராட்சிகளுடன் அரசு கைகோர்த்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, மலிவு விலை உணவகம் என்ற அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.

சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் முதல் அம்மா உணவகத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னையில் 200 வார்டுகளிலும் தலா ஒரு அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டன. காலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும், ரூ.3-க்கு பொங்கலும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதேபோல், மதியம் சாம்பார் சாதம் ரூ.5, கலவை சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கும், மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மலிவு விலையில் ஏழை- எளிய மக்களின் பசியை போக்கியது மட்டுமில்லாமல், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினையும் அம்மா உணவகம் பெற்றது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்களும், இதர பகுதிகளில் 247 என மொத்தம் 654 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் குறித்த செய்தியை அறிந்து, எகிப்து நாட்டை சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதி நிதிகளும் வந்து பார்த்து விட்டு வியந்து சென்றனர். அ.தி.மு.க.வின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக அம்மா உணவகம் பேசப்பட்டது.

அந்த அளவுக்கு நேர்த்தியாக, மலிவு விலையில் தரமான-சுவையான உணவு வழங்கி துடிப்போடு செயல்பட்டு வந்த இந்த அம்மா உணவகங்கள், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆதரவற்ற நிலையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும்போது, அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தனர்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அம்மா உணவகங்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லாதது போல் போய்விட்டது. தரமான, சுவையான உணவுகள் என்று இருந்த நிலை மாறி, சுவை குறைவு, தரமில்லாமை என்ற குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளாகி, விற்பனை சரிந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. முறையாக நிர்வகிக் கும் திறன் இல்லாததே, அம்மா உணவகம் பொலிவு இழந்ததற்கான காரணம் என்று அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் பல்வேறு ஊழல்களில் ஈடுபடுவதாக புகார்களும் வருகின்றன. மேலும், அம்மா உணவகங்களில் தயாராகும் இட்லியை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் ஓட்டல்களுக்கு விற்பனை செய்வதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், அது வெறும் கண்துடைப்பாகவே இருப்பதாகவும் அம்மா உணவக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது.

அம்மா உணவகம் முதலில் இருந்த பெருமையை இழந்துவிட்டது. மீண்டும் பழைய பெருமையை தக்க வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கூடுதலாக அம்மா உணவகங்களில் எந்த மாதிரியான உணவு வகைகளை சேர்க்கலாம்?, அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் வருகையை எப்படி அதிகப்படுத்துவது? போன்ற பல்வேறு கருத்துகளை அதிகாரிகள், ஊழியர்கள் தரப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதை நாங்கள் பரிசீலித்து அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். இதுவரை அம்மா உணவகம் தட்டு தடுமாறி செயல்பட்டு வருகிறது. எப்போது நிற்கும்? என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலான நிதி அம்மா உணவகத்துக்கே ஒதுக்கப்படுவதால் மற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி நடக்கிறது என்று அமைச்சர்கள் கூறினாலும், ஜெயலலிதா தொடங்கி, தமிழ்நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்மா உணவகம் தற்போது ஆதரவற்ற நிலையில் இருப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டு இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் பலரும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில் அம்மா உணவகத்தை மாநகராட்சி நிர்வகித்து வந்தாலும், அரசு இதில் முழுகவனம் செலுத்தி, அவர்களுடன் கைகோர்த்து நடவடிக்கை எடுத்து, அம்மா உணவகத்தின் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story