மாவட்ட செய்திகள்

ஊட்டி மலைப்பாதையில் கோர விபத்து: 150 அடி கிடுகிடு பள்ளத்தில் அரசு பஸ் உருண்டது - 8 பேர் பரிதாப சாவு + "||" + The accident occurred in the mountain of the Ooty: the 150-foot Kidugudu drops of the state bus rolled out - 8 dead

ஊட்டி மலைப்பாதையில் கோர விபத்து: 150 அடி கிடுகிடு பள்ளத்தில் அரசு பஸ் உருண்டது - 8 பேர் பரிதாப சாவு

ஊட்டி மலைப்பாதையில் கோர விபத்து: 150 அடி கிடுகிடு பள்ளத்தில் அரசு பஸ் உருண்டது - 8 பேர் பரிதாப சாவு
ஊட்டி மலைப்பாதையில் 150 அடி கிடுகிடு பள்ளத்தில் அரசு பஸ் உருண்டது. இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊட்டி,

ஊட்டி மலைப்பாதையில் 150 அடி கிடுகிடு பள்ளத்தில் அரசு பஸ் உருண்ட கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுக்கு ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. இதுதவிர சாலை களில் தண்ணீர் தேங்கி அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மலைப்பகுதியில் உள்ள மண்ணில் ஈரப்பதம் இருப்பதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. நேற்றும் காலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது.


இந்த நிலையில் நேற்று பகல் 11.15 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. அதில் சுமார் 36 பயணிகள் இருந்தனர். பஸ்சை ஊட்டி மணியட்டியை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் (வயது 38) என்பவர் ஓட்டினார். ஊட்டி அருகே உள்ள குருத்துக்குழியை சேர்ந்த பிரகாஷ் (42) என்பவர் கண்டக்டராக இருந்தார். 11.30 மணிக்கு மந்தாடா அருகே மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த சாலையில் சிறிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் பஸ் இறங்கி விடாமல் இருக்க டிரைவர் ரோட்டின் வலதுபுறமாக திருப்பினார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த 150 அடி கிடுகிடு பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. மரங்கள் ஏதும் இல்லாததால் பஸ் நிற்காமல் பலமுறை பல்டி அடித்தபடி மலைச்சரிவில் உருண்டது. இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அய்யோ, அம்மா என்று அலறினர். பஸ் பலமுறை உருண்டதால் அதன்பாகங்கள் உடைந்து நொறுங்கி கழன்று விழுந்தன. அப்போது பஸ்சில் இருந்த சில பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

ஆனாலும் பஸ் நிற்காமல் உருண்டு அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்தது. 150 அடி பள்ளத்தில் உருண்டதால் பஸ்சின் மேற்கூரை தனியாக கழன்று விழுந்தது. பஸ்சின் இருக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி உருக்குலைந்து கிடந்தது.

இதனால் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் லேசான காயங்களு டன் உயிர் தப்பினர். சில பயணிகள் கை கால்களை இழந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த படி கிடந்தனர். இதை அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற இளைஞர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை அங்கேயே விட்டு விட்டு, பஸ் உருண்டு விழுந்து கிடந்த பகுதியை நோக்கி இறங்கினர். அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் சென்ற இளைஞர்கள், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை மீட்டு தூக்கி கொண்டு வந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வேன்களில் ஏற்றப்பட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர் ராஜ்குமார், கண்டக்டர் பிரகாஷ் உள்பட 22 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். சிகிச்சை பலனின்றி மூர்த்தி (வயது 47) என்பவரும் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

விபத்தில் இறந்த 8 பேரின் பெயர் விவரம் வருமாறு:-

சாந்தகுமாரி (வயது55), அரசு பூங்கா, ஊட்டி, தருமன் (64), வேலிதளா, ஊட்டி, தினேஷ் (30), குன்னூர், நந்தகுமார் (36), நொண்டிமேடு, ஊட்டி, பிரபாகரன் (50), ஜெயஸ்ரீ (45), பெங்களூரு, மற்றும் குன்னூரை சேர்ந்த அல்மாஸ் (28), என்கிற பெண், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும் வழியில் இறந்தார். மூர்த்தி (47). சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மலைப்பாதையில் அரசு பஸ் உருண்ட விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1.பாலசந்தர் (62), 2.சகாயமேரி (50), 3.மாரிமுத்து (59), 4.விஷால் (11), 5.சுமதி (40), 6.அசோக் (32), 7.ஆல்துரை (60), 8.வெங்கடேஷ் (33), 9.நிவேதா (18), 10.மவுலிஸ்வரன் (19),
11.ரமேஷ் (50),

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1.ஊட்டி அருகே குருத்துக்குழியை சேர்ந்த பிரகாஷ் (42), பஸ் கண்டக்டர், 2.ஊட்டி மணியட்டி ராஜ்குமார் (38), பஸ் டிரைவர், 3.பானுமதி (35), 4.யசோதா (63), 5.ராணி (50),
6.சுகன்யா (21), 7.சீனிவாசன் (27), 8.மற்றொரு கிருஷ்ணன் (60), 9.சாந்தி (45), 10.ஜோதிலட்சுமி (22), 11.நமச்சிவாயம் (54), 12.பால்ராஜ் (50), 13.சுமதி (40), 14.ஆனந்தன் (36),
15.ஜெயராம் (39), 16.பார்பி (47), 17.நடராஜ் (56), 18.மணி (56), 19.கணேஷ் (23)

அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசாரும், குன்னூர் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமையில் கேத்தி பேரூராட்சி பணியாளர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அர்ஜூனன் எம்.பி, மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் ஆகியோர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

விபத்து நடந்த அரசு பஸ் ஊட்டி தங்காடு-ஓரநள்ளி வழியாக இயக்கப்பட்டு வந்துள்ளது. பிரேக் பிடிப்பதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் அந்த பஸ் ஊட்டி டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டு கோளாறுகள் சரி செய்யப்பட்டன.

இந்த நிலையில் மேல்குந்தா-குன்னூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் வேறு தடத்துக்கு மாற்றப்பட்டதால், அதில் இருந்த கண்டக்டரும், டிரைவரும், விபத்து நடந்த பஸ்சுக்கு மாற்றப்பட்டு, நேற்று காலை பணிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் அங்குபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மலைப்பாதையில் அரசு பஸ் உருண்டு 8 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.