அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி: கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்


அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி: கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 15 Jun 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் மோதியதில் கோவிலுக்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

விக்கிரவாண்டி,

விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் மந்தைவெளி தெருவை சேர்ந்தவர் குமார் மகன் பரமசிவம் (வயது 20), கண்டமங்கலம் நத்தமேடு தெருவை சேர்ந்தவர் ராயர் மகன் விக்னேஷ் (20). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் கண்டமங்கலத்தில் இருந்து புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பரமசிவம் ஓட்டிச்சென்றார்.

விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் என்ற இடத்தில் இரவு 11 மணியளவில் சென்றபோது எதிரே செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story