கார் மோதி புதுமாப்பிள்ளை பலி: பேரூராட்சி செயல் அலுவலரின் மகன் கைது


கார் மோதி புதுமாப்பிள்ளை பலி: பேரூராட்சி செயல் அலுவலரின் மகன் கைது
x
தினத்தந்தி 14 Jun 2018 10:15 PM GMT (Updated: 14 Jun 2018 9:37 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே கார் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவத்தில் பேரூராட்சி செயல் அலுவலரின் மகனை போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் ஆவர்.

இவர்களது மகன் ராஜகுரு (வயது 27). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் மெக்கானிக்காக பணியாற்றி வந் தார். இவருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இவருடைய மனைவி மெர்லின் ஷீலா (24). இவர், தாழக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். புது மாப்பிள்ளையான ராஜகுரு தினமும் காலையில் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்து சென்று பள்ளியில் விட்டு, மாலையில் அழைத்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மனைவியை அழைத்து வருவதற்காக சென்றபோது, ஆரல்வாய்மொழி அருகே தோப்பூர் விலக்கு பகுதியில் அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் அடையாளம் தெரிந்தது.

அதில் அந்த கார், ஆரல்வாய்மொழி காமராஜர் புதூரை சேர்ந்த அகஸ்திலிங்கம் என்பவருக்கு சொந்தமானது தெரிய வந்தது. அகஸ்திலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலராக உள்ளார். விபத்து நடந்த போது, காரை அகஸ்திலிங்கத்தின் மகன் நைனார் (27) ஓட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் நள்ளிரவில் விபத்தை ஏற்படுத்திய காரை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதற்கிடையே நேற்று காலை பலியான ராஜகுருவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய கார் நிற்பதை கண்டவுடன் ஆத்திரமடைந்தனர்.

உடனே, அவர்கள் காரை ஓட்டி வந்தவரை கைது செய்யாமல் ராஜகுருவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வாகனத்தில் சென்று சிறிது நேரத்தில் நைனாரை அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். 

Next Story