6, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேஅறையில் பாடம் நடத்தியதை கண்டித்த கலெக்டர்


6, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேஅறையில் பாடம் நடத்தியதை கண்டித்த கலெக்டர்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:15 AM IST (Updated: 15 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

6 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே அறையில் வைத்து பாடம் நடத்தியதை கண்டித்த கலெக்டர், தனித்தனி அறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

திருச்சி,

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள், தார்சாலை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கஞ்சநாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள வீர சமுத்திர ஏரியை பார்வையி்ட்ட அவர், ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி எடுக்கவும், கரையை பலப்படுத்தவும், ஏரியில் நீர் பிடிப்பு பகுதியை அதிகரிக்கவும், கட்டமைப்பு வசதியை மேம் படுத்த வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களை கண்டறிந்து மழை காலங்களில் நீர் சேமித்து வைப்பதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, கவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வையிட்ட போது, இப்பள்ளியில் போதுமான அளவிற்கு கட்டிட வசதிகள் உள்ளது. 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளியில் 82 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள். 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்று தலைமை ஆசிரியர், கலெக்டரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் கலெக்டர் விசாரித்தபோது 6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்டறிந் தார். இதனை கண்டித்த அவர், ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியான வகுப்பறை வசதி இருக்கும் போது தனித்தனியாக பாடத்தை கற்பிக்க வேண்டும். 6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து கல்வி கற்பிப்பதால் மாணவர்கள் முழுமையாக கல்வி கற்க இயலாத நிலை ஏற்படும். இனிவரும் காலங்களில் அந்தந்த வகுப்புகளுக்கு தனித்தனி அறையில் தான் பாடம் நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்காமல் இருக்க மாவட்ட கல்வி அதிகாரி அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், அம்மா சத்திரம் புதூர், நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்த போது அந்த கடையில் விலையில்லா அரிசி பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இருப்பு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டதால் மாவட்ட வழங்கல் அதிகாரி, வட்ட வழங்கல் அதிகாரி ஆகியோரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைக்கு உடனடியாக அரிசி வழங்கவும் உத்தரவிட்டார். 

Next Story