மதுகுடிக்க பணம் தராததால் விவசாயி வெட்டிக்கொலை; மகன் கைது


மதுகுடிக்க பணம் தராததால் விவசாயி வெட்டிக்கொலை; மகன் கைது
x
தினத்தந்தி 15 Jun 2018 3:45 AM IST (Updated: 15 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை அருகே மதுகுடிக்க பணம் தராததால் விவசாயியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூரை சேர்ந்தவர் சேகர்(வயது 50). விவசாயியான இவருக்கு மணிகண்டன், அருண்(27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் அருண் சரியாக வேலைக்கு செல்லாமல், தந்தை சேகரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிப்பழக்கத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அருணுக்கு, சேகர் அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு மது குடிக்க பணம் கேட்டு சேகரிடம், அருண் தகராறு செய்துள்ளார். அப்போது சேகர் பணம் இல்லை என்று கூறி திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண் அருகே கிடந்த அரிவாளால் சேகரை வெட்டினார். இதில் படுகாயமடைந்த சேகர் மயங்கி விழுந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சேகர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேகரின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story