40 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை: காலி குடங்களுடன் பெண்கள் மறியல்


40 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை: காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:30 PM GMT (Updated: 14 Jun 2018 10:05 PM GMT)

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 16, 17-வது வார்டு பகுதி மக்களுக்கு நகராட்சி மூலம் சுழற்சி முறையில் வழங்கப்படும் குடிநீர் கடந்த 40 நாட்களாக வழங்கப்படாததால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் நாடார் சிவன்கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நகராட்சி வரைவு நிர்வாக அலுவலர் சுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். 2 தினங்களுக்குள் குடிநீர் கிடைப்பதற்கான வழி வகை செய்யப்படும் என்றதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு கடந்த 40 நாட்களாக நகராட்சி குடிநீர் கிடைக்கவில்லை. அங்கு உள்ள ஆழ்குழாய் கிணறு செயல்பாடற்று கிடக்கிறது. பல முறை புகார் கூறியும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர். இந்த சம்பவத்தால் அருப்புக்கோட்டை மதுரை சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story