செல்பி எடுத்த போது உயிரிழந்த பரிதாபம்: அணையில் மூழ்கிய மதுரை ஜவுளிக்கடை ஊழியர் பிணமாக மீட்பு


செல்பி எடுத்த போது உயிரிழந்த பரிதாபம்: அணையில் மூழ்கிய மதுரை ஜவுளிக்கடை ஊழியர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 15 Jun 2018 4:35 AM IST (Updated: 15 Jun 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

செல்பி எடுத்த போது மாவூர் அணையில் பரிசல் கவிழ்ந்து மூழ்கிய மதுரை ஜவுளிக்கடை ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார்.

கொடைரோடு,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த ஆலங்குளத்தை சேர்ந்த கணேசன் மகன் செண்பகமூர்த்தி (வயது 28). இவர் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடன் நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறையை சேர்ந்த குமார் (வயது28), மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் (24) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 12-ந்தேதி மாலையில் குமார், நண்பர்கள் செண்பகமூர்த்தி, முத்துராஜ், மட்டப்பாறையை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் பள்ளப்பட்டி மாவூர் அணையின் உள்பகுதியில் பரிசலில் சென்றனர். அப்போது தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். இந்த சமயத்தில் நிலை தடுமாறி பரிசல் தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் செண்பகமூர்த்தி, குமார், முத்துராஜ், கார்த்திக் ஆகிய 4 பேரும் தண்ணீரில் விழுந்தனர். ஆனால் குமார், முத்துராஜ், கார்த்திக் ஆகியோர் நீச்சல் அடித்து கரைக்கு வந்தடைந்தனர்.

செண்பகமூர்த்தி மட்டும் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதையொட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மாவூர் அணையில் தண்ணீரில் மூழ்கிய செண்பகமூர்த்தியை தேடி வந்தனர்.

மேலும் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் இருந்து படகு கொண்டு வரப்பட்டு அதில் ஏறி தீயணைப்பு படையினர் செண்பகமூர்த்தியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் செண்பகமூர்த்தியில் உடல் தண்ணீரில் மிதந்தது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி இறந்த செண்பகமூர்த்திக்கு மீனாள் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

Next Story