குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இன்று படகு சவாரி தொடக்கம்
குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) படகு சவாரி தொடங்குகிறது.
தென்காசி,
குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) படகு சவாரி தொடங்குகிறது.
சீசன் களை கட்டியதுநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் நாளுக்கு நாள் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நேற்று குற்றாலத்தில் வெயிலே இல்லை. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. இதனால் இதமான சூழல் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
படகு சவாரிகுற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாம் உள்ளது. ஆண்டுதோறும் குற்றாலம் சீசன் காலத்தில் அங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் படகு சவாரி இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து படகு குழாம் அலுவலர் அசோகன் கூறியதாவது:–
அமைச்சர் தொடங்கி வைக்கிறார்வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அங்கு படகு சவாரி தொடக்க விழா நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்குகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படகு சவாரியை தொடங்கி வைக்கிறார்.
இங்கு 29 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 4 இருக்கைகள் கொண்ட 16 பெடல் படகுகளும், 2 இருக்கைகள் கொண்ட 4 பெடல் படகுகளும், 5 துடுப்பு படகுகளும், ஒருவர் மட்டும் செல்லக்கூடிய கயாக் வகையை சேர்ந்த 4 துடுப்பு படகுகளும் உள்ளன.
கட்டணம்இந்த படகுகளுக்கு அரை மணி நேரத்துக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படுகிறது. 4 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.150–ம், 2 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.120–ம், துடுப்பு படகுக்கு ரூ.185–ம், கயாக் வகை படகுக்கு ரூ.95–ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
படகில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்படும். அதை அணிந்துதான் படகில் செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகளின் உதவிக்கு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.