நெல்லை மார்க்கெட்டுக்கு கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படும் பூசணிக்காய் வரத்து குறைந்ததால் விலை உயர்வு
நெல்லை மார்க்கெட்டுக்கு கர்நாடகாவில் இருந்து பூசணிக்காய் கொண்டு வந்து விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை,
நெல்லை மார்க்கெட்டுக்கு கர்நாடகாவில் இருந்து பூசணிக்காய் கொண்டு வந்து விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
காய்கறிகள் வரத்து குறைவுநெல்லை டவுன் நயினார்குளம் கரையில் காய்கறிகள் மொத்த விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு நெல்லை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து காய்கறிகள் மொத்தமாக கொண்டு வந்து இறக்கப்படுகின்றன.
இவை இரவு நேரத்தில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன. மறுநாள் அதிகாலை நேரத்தில் சில்லரைக்கும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து இருக்கிறது.
பூசணிக்காய்இதே போல் பூசணிக்காய் வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதையடுத்து நெல்லையை சேர்ந்த வியாபாரிகள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பூசணிக்காய் கொள்முதல் செய்து வருகின்றனர். கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை வாங்கி, லாரிகள் மூலம் நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த பூசணிக்காய்களை கேரளா மக்கள் விரும்பி சாப்பிடுவதால், கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு வந்து மொத்தம், மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனை கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து மினி லாரிகள் மூலம் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நெல்லை பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் சில்லரை காய்கறி கடைகளுக்கும் வாங்கி செல்கின்றனர். வரத்து குறைவால் பூசணிக்காய் விலை உயர்ந்தும் இருக்கிறது. பூசணிக்காய் சில்லரைக்கு ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
கேரளாக்கு ஏற்றுமதிஇதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இந்த ஆண்டு பூசணிக்காய் வரத்து குறைந்து விட்டது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெருமளவு பூசணிக்காய் கொள்முதல் செய்து கொண்டு வருகிறோம். தமிழகத்தில் செங்கல்பட்டு பகுதியில் இருந்தும் குறைந்த அளவு பூசணிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் விளையும் பூசணிக்காய் லேசான வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் கர்நாடகா மாநில பூசணிக்காய் உள்ளே அதிக மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் சுவையும் நன்றாக இருக்கும். அதனால் கேரளா வியாபாரிகள் இந்த வகை பூசணிக்காய்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்’’ என்றார்.