நெல், வாழை உள்பட 7 பயிர்களுக்கு காப்பீடு திட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல், வாழை உள்ளிட்ட 7 பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல், வாழை உள்ளிட்ட 7 பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
காப்பீடு திட்டம்புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் குறைவிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2016–17 மற்றும் 2017–18–ம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டது. 2018–19–ம் ஆண்டிலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடுத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
7 பயிர்கள்இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கு காரீப் பருவ பயிர்களான நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி, வாழை, வெங்காயம் ஆகிய பயிர்களுக்காக காப்பீடுத்தொகை செலுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் கடன்பெற்ற விவசாயிகள் மற்றும் கடன்பெறாத விவசாயிகள் அனைவருக்கும் ஒரே விதமான பயிர் காப்பீடுத்தொகை மற்றும் சேர்க்கைக்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடுத் திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரிமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளது.
காப்பீடு விவரம்விவசாயிகள் பயிர் காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.470–ம், உளுந்து பயிருக்கு ரூ.286–ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.316–ம், பருத்தி பயிருக்கு ரூ. 775–ம், வெங்காயம் பயிருக்கு ரூ.825–ம், வாழை பயிருக்கு ரூ.715–ம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது கடன் பெறும் மற்றும் கடன் பெறாத சிறு குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும்.
விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீடு செலுத்த வேண்டிய கடைசி நாள் வருகிற 31.7.2018 ஆகும். அதே போல் உளுந்து, நிலக்கடலை, பருத்தி பயிர்களுக்கு 16.8.2018 அன்றும், வாழை மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு 1.10.2018 அன்றும் கடைசி நாளாகும்.
செலுத்துவது எப்படி?எனவே விவசாயிகள் காரீப்பருவ பயிர்களுக்கு உரிய காலத்தில் காப்பீடு தொகையை தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ செலுத்திட வேண்டும். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.