குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
கள்ளக்குறிச்சியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி வி.ஐ.பி. கார்டன் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த இடம் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கும் குப்பைகளை சேகரித்து இயற்கை உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து, இங்கு உரம் தயாரிப்பதற்காக குப்பைகளை கொட்டக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் லட்சுமி, பொறியாளர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் லட்சுமி, பொறியாளர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் செல்வக்குமாரை ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், இயற்கை உரம் தயாரிப்பதற்காக குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டி குப்பைகளை கொட்டக்கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள், பள்ளம் தோண்டும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். அதன் பின்னர் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.