பிளாஸ்டிக் பயன்பாட்டை வணிகர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும், கலெக்டர் பேச்சு


பிளாஸ்டிக் பயன்பாட்டை வணிகர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும், கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2018 4:15 AM IST (Updated: 16 Jun 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பயன்பாட்டை வணிகர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தேனியில் நடந்த பயிற்சி முகாமில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசினார்.

தேனி,

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையத்தின் சார்பில், உணவுப்பொருள் வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வை பயிற்சி முகாம் தேனியில் நடந்தது. பயிற்சியை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:–

உணவுப்பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் ஒரே மாதிரியான தரத்துடன், ஒரே அளவில் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் உணவுப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு ஆகும். அந்த உணவினை நல்ல முறையில் தரமான பொருட்களாக வழங்கிட அனைவரும் முன்வர வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தரமான, சுத்தமான, சுகாதாரமான, சத்தான பொருட்களை பொதுமக்களுக்கு கிடைத்திட பல வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனை அனைவரும் முறையாக பின்பற்றிட வேண்டும். நுகர்வோர் மற்றும் பொதுமக்களை வணிக நிறுவனங்களை சார்ந்தவர்கள் தங்களது குடும்ப அங்கத்தினர்களாக எண்ணி சேவை செய்திட வேண்டும். வணிக நிறுவனங்களை சார்ந்தவர்கள் தங்களது நிறுவனங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உணவுப்பொருட்களை விற்பனை செய்திட வேண்டும்.

பொதுமக்களின் உணவு பழக்கங்கள் மாற, மாற தற்பொழுது துரித உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அவை உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்பது கேள்விக்குறியாகும். பொதுமக்களும் உணவுப்பொருட்களை வாங்கும் போது அதன் தரம் மற்றும் கலவைப்பொருட்களின் அளவு, அரசு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதனை பார்த்து பயன்படுத்திட வேண்டும்.

மேலும், நமது மண், மக்களின் சுகாதாரம் மற்றும் இயற்கை சூழ்நிலைகளை பாதுகாத்திட வணிகர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். இதுதொடர்பாக தங்களது சங்கத்தில் இதனை ஒரு தீர்மானமாக கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். அப்பொழுது தான் இத்திட்டம் முழு அளவில் பயன்தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story