தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை நாய்கள்–கன்றுக்குட்டியை கவ்வி சென்றது


தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை நாய்கள்–கன்றுக்குட்டியை கவ்வி சென்றது
x
தினத்தந்தி 16 Jun 2018 4:00 AM IST (Updated: 16 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை நாய்கள்–கன்றுக்குட்டியை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்டது மரியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 32). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு பாபு 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். காவலுக்கு 2 நாய்களையும் கட்டி வைத்துள்ளார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாபு திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவரது நாய் குரைத்து கொண்டே விவசாய நிலத்தில் ஓடியது. இதனால் பாபு டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருந்தது.

திடீரென நாயை பார்த்த சிறுத்தை அதை கவ்வி தூக்கிக்கொண்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த பாபு சத்தம் போட்டுள்ளார். ஆனாலும் சிறுத்தை அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. அதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை, மகேஷ் என்பவரது தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த கன்றுக்குட்டியையும், பழனிச்சாமி என்பவருடைய 2 நாய்களையும் சிறுத்தை கவ்விச்சென்று கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அப்பகுதியில் 3 நாய்கள் ஒரு கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கன்றுகுட்டியை கடித்த சிறுத்தை பல இடங்களில் சுற்றி திரிந்து உள்ளது. அதன் கால் தடங்கள் பதிவாகி உள்ளது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.


Next Story