மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ முற்றிலும் எரிந்து சேதம்


மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ முற்றிலும் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 16 Jun 2018 3:45 AM IST (Updated: 16 Jun 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த டிரான்ஸ்பார்மர் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.

அம்பத்தூர், 

சென்னை வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் தனியார் திரையரங்கம் அருகில் 2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இந்த இரண்டு டிரான்ஸ்பார்மர்களுக்கும் அருகில் இருந்த சிறிய மின் பெட்டியில் இருந்த ஒயர்களில் இருந்து தெறித்த தீ பொறி கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த ஒரு டிரான்ஸ்பார்மருக்கு பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அருகில் இருந்த தனியார் திருமண மண்டப சுவர்களில் பதித்திருந்த டைல்ஸ்கள் உடைந்து நொறுங்கின. இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த சிட்கோ நகர் தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், அந்த டிரான்ஸ்பார்மர் முற்றிலும் தீயில் எரிந்து கருகியது.

இதனால் இப்பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை முதல் 15-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் புதிய டிரான்ஸ்பார்மரை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “இரவு நேரங்களில் மிக கூடுதலான மின் உபயோகத்தால் மின்சார ஒயர்களில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும். புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி இன்று நிறைவடையும்” என்றார்.

Next Story