திருவாடானை யூனியனில் வளர்ச்சிப் பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
திருவாடானை யூனியன் பகுதியில் மத்திய–மாநில அரசுகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொண்டி,
திருவாடானை யூனியனில் மத்திய–மாநில அரசு சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் கட்டவிளாகம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள விவசாய பாசன கிணறுகளை பார்வையிட்டார்.
அதனைதொடர்ந்து வட்டாணம் ஊராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஊராட்சி மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக நடைபெறுகிறதா என்பதை கேட்டறிந்து முறையாக குடிநீர் வினியோகம் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின்னர் எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாயை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களின் குடிநீர் தேவையை சரி செய்ய தாங்களாகவே ஆழ்குழாயை அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கிய எஸ்.பி.பட்டினம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை கலெக்டர் நடராஜன் பாராட்டினார்.
அதன் பின்னர் எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஜமாத் தலைவர் அசன்அலி, கவுரவ தலைவர் முகமது முக்தார், துணை தலைவர் சர்புதீன், செயலாளர் கராமத்தலி, பொருளாளர் நிஹ்மத்துல்லா, இணை செயலாளர் ஹிதாயத்துல்லா, துணை செயலாளர் ரபீக் ஆகியோர் எஸ்.பி.பட்டினம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் எஸ்.பி.பட்டினத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்குழாய் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் மரிய அருள், மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.