‘எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு’ கவர்னர் கிரண்பெடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை
‘எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு’ டெல்லியை போன்று போராட தயாராக உள்ளதாக கவர்னர் கிரண்பெடிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– டெல்லியில் கவர்னருக்கு எதிராக முதல்–மந்திரி கவர்னர் மாளிகையிலேயே போராட்டம் நடத்தி வருகிறார். நீங்கள் கவர்னருக்கு எதிராக எப்போது போராட போகிறீர்கள்?
பதில்:– நாங்கள் நாகரிகம் கருதி சட்டத்தின்படி செயல்படுகிறோம். அந்த நிலைக்கு செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது பொறுமைக்கும் எல்லை உண்டு.
பட்ஜெட்டிற்கு அனுமதி?கேள்வி:– புதுவை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்துவிட்டதா?
பதில்:– புதுவை பட்ஜெட் தொடர்பான கோப்பில் உள்துறை செயலாளர் கையெழுத்திட்டுவிட்டார். இதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்குவார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னை ஐகோர்ட்டில் ஒரே மாதிரியான வழக்கில் 2 விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுவைக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்பது போல் உள்ளது. இதனால் நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைகிறது. நீதிமன்றங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகி விடக்கூடாது.
டெல்லியில் கவர்னருக்கும், முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டும், மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டதை கண்டித்தும் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த அரசை முடக்கும் வேலையை செய்கிறது. புதுவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற காலதாமதம் செய்வது, கோப்புகளை டெல்லிக்கு அனுப்புவது, ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவற்றை கவர்னர் கிரண்பெடி செய்து வருகிறார்.
சமூக வலைதளங்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை கவர்னர் மிரட்டி வருகிறார். தொடர்ந்து அவர் விதிமுறையை மீறி செயல்படுகிறார். இதுதொடர்பாக புகார் தெரிவித்து கடிதம் எழுதியபோதிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதை சமாளித்துத்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனால்தான் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறோம்.
இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்துள்ளோம். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புதுவைக்கு தனி அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதை சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவருவோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.