சேலத்தில் ஆட்டோ டிரைவர் கொலை: கள்ளக்காதலி மகன் உள்பட 6 பேர் கைது


சேலத்தில் ஆட்டோ டிரைவர் கொலை: கள்ளக்காதலி மகன் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2018 4:53 AM IST (Updated: 16 Jun 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஆட்டோ டிரைவர் கொலையில் கள்ளக்காதலி மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையுண்டவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் நரசோதிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன்(வயது 35), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மஞ்சு. இவர்களுக்கு தீபிகா, சவுமியா என்ற 2 மகள்களும், கவியரசு என்ற மகனும் உள்ளனர். சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு உலகநாதன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் கோபாலுக்கும், ஜோதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. தாயின் கள்ளக்காதலை உலகநாதன் கண்டித்தார். மேலும் அவர் கோபாலிடம் தங்களுடைய வீட்டுக்கு இனிமேல் வரக்கூடாது என்று கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்தநிலையில் உலகநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் கோபாலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

இதுதொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று உலகநாதன்(20) மற்றும் அவருடைய நண்பர்களான சேலம் கடைவீதியை சேர்ந்த ராஜ்குமார்(23), பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பூபாலன்(23), அரவிந்த்குமார்(22), பிரசாந்த்(20), விஜய்(20) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

உலகநாதனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, ‘தனது தாயுடன் கோபால் வைத்திருந்த கள்ளக்காதலை உலகநாதன் விரும்பவில்லை. இந்த கள்ளக்காதலை கைவிட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்கு வரக்கூடாது என்று அடிக்கடி அவர் கோபாலிடம் கூறி வந்துள்ளார். ஆனால் இதை கோபால் கேட்கவில்லை. இந்த ஆத்திரத்தில் தான் நண்பர்களுடன் சேர்ந்து உலகநாதன் இந்த கொலையை செய்து உள்ளார்‘ என்று தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட கோபாலின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து திடீரென போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கோபாலை கொலை செய்தது தொடர்பாக ஜோதி, அவருடைய மகன் உலகநாதன், மருமகள் ஜோதிகா மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கு தர்ணாவிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கோபாலின் மனைவி மஞ்சு உள்பட உறவினர்கள் சிலர் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அவர்களிடம் கலெக்டர், இந்த கொலை தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கோபாலின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story